சினிமா உலகில் எட்டு தீவிரவாதங்கள்.. கங்கனா வெளியிட்ட பட்டியல்..

அரசியல்வாதிகளை மிஞ்சும் வகையில் தினமும் ஓர் அறிக்கை வெளியிட்டு, இந்தி சினிமாக்காரர்களை ஆத்திரமூட்டிவரும் நடிகை கங்கனா ரணாவத், நேற்று நான்கைந்து ’ட்விட்’களை ஒரே நேரத்தில் விசிறி அடித்துள்ளார்.

வழக்கம் போல், இந்தி சினிமா உலகை மட்டம் தட்டும் ’ட்விட்’ தவறாமல் இடம் பெற்றுள்ளது.

என்ன டிவிட்டர் அது?

‘’இந்தியாவிலேயே இந்தி சினிமா உலகம் தான் நம்பர் –ஒன் என பலர் நினைத்து கொண்டிருக்கிறார்கள். அது மகா தப்பு. இந்தியாவில் தெலுங்கு சினிமா உலகம் தான் உயர்ந்த இடத்தில் உள்ளது. பல மொழிகளில் ‘பான் இந்தியா’ படங்கள் தெலுங்கில் தயாரிக்கப்படுகின்றன. இந்திப்படங்கள் கூட ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தான் எடுக்கப்படுகின்றன’’ என்பது பிரதான ட்வீட்.

சினிமா உலகத்தை எட்டு தீவிரவாதங்கள் சீரழிப்பதாக இன்னொரு டிவிட்டரில் தெரிவித்துள்ள கங்கனா, இதனைக் களைந்தால் தான் சினிமாவை காப்பாற்ற முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அவர் பட்டியலிட்டுள்ள 8 தீவிரவாதங்கள் இவை:

1.வாரிசு தீவிரவாதம்

2. போதைமாபியாக்கள்தீவிரவாதம்.

3.’செக்ஸ்’ தீவிரவாதம்

4.மத- பிராந்திய தீவிரவாதம்

5.அந்நிய சினிமா தீவிரவாதம்

6. திருட்டு வி.சி.டி. தீவிரவாதம்

7. தொழிலாளர் உழைப்பை உறிஞ்சும் தீவிரவாதம்

8. திறன் உறிஞ்சும் தீவிரவாதம்

இப்படியாக எட்டு தீவிரவாதங்களைப் பட்டியலிட்டு, இதனை ஒழிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ள கங்கனா, இன்னொரு டிவிட்டரில் ’ இந்தியாவில் பிராந்திய ரீதியாக பலப்பல பெயர்களில் செயல்படும் சினிமா துறையை ,  ’இந்திய சினிமா துறை’ என ஒரே பெயரில் இணைக்க வேண்டும்’’ எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

-பா.பாரதி.