மாஸ்கோ

ஷ்யாவின் கொரோனா தடுப்பூசி ஸ்புட்னிக் வி மருந்தை இந்திய முன்னணி மருந்து நிறுவனம் டாக்டர் ரெட்டி ஆய்வகம் கொள்முதல் செய்ய உள்ளது.

கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டு பிடிக்கப் பல உலக நாடுகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன.   இதில் ரஷ்யா முதலாவதாக ஸ்புட்னிக் வி என்னும் மருந்தை கண்டறிந்துள்ளதாக அறிவித்துள்ளது.    இந்த மருந்து குறித்து உலக அளவில் விஞ்ஞானிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.  ரஷ்யாவிடம் இருந்து இந்த மருந்தைக் கொள்முதல் செய்ய பிரேசில், மெக்சிகோ மற்றும் கஜகஸ்தான் உள்ளிட்ட நாடுகள் ஒப்பந்தம் செய்துள்ளன.

இந்நிலையில் ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிதி அமைப்பின் அறிக்கையில், “இந்தியாவில் ஸ்புட்னிக் வி மருந்தை 300 மில்லியன் டோஸ் அளவுக்கு தயாரிக்க ஒப்பந்தம் இடப்பட்டுள்ளது   அத்துடன் இந்தியாவில் செயல்படும் டாக்டர் ரெட்டி ஆய்வகத்துக்கு 100 மில்லியன் டோஸ் மருந்து விற்பனை செய்யப்பட ஒப்பந்தம் இடப்பட்டுள்ளது.

இந்தியாவில் இதற்கான ஒப்புதலைப் பெற நடவ்கடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்த பிறகு இந்த தடுப்பு மருந்தைச் செலுத்தும் பரிசோதனை நடைபெறும்.   அதன் பிறகு விநியோகம் தொடங்கும்.   அநேகமாக இந்த ஆண்டு இறுதியில் விநியோகம் தொடங்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் டாக்டர் ரெட்டி ஆய்வக துணைத் தலைவர் ஜி வி பிரசாத் தமது அறிக்கையில், “ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி மருந்தின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனையில் நம்பத் தகுந்த முடிவுகள் கிடைத்துள்ளன.  எனவே கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெற ஸ்புட்னிக் வி மருந்து சிறந்த வாய்ப்பை அளிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.