மும்பை: வீதி மீறியதாக கூறி, தனது பங்களாவை அவசரம் அவசரமாக இடித்ததற்கு ரூ.2 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி, நடிகை கங்கனா, மகாராஷ்டிரா மாநில அரசு மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
முப்பை திரையுலகில் நிகழும் போதைப்பொருள் குறித்து, நடிகை கங்கனா கருத்து தெரிவித்ததால், ஆளும் சிவசேனா அரசுக்கும், கங்கனாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால், கங்கனாவுக்கு சிவசேனா மிரட்டல் விடுத்து. அவர் மும்பை வர முடியாது என்று மிரட்டப்பட்ட நிலையில், அவருக்கு மத்தியஅரசு இசட்பிளஸ் பாதுகாப்பு வழங்கியது. அதனால் அவர் மும்பை வந்து சென்றார்.
இதற்கிடையில், மும்பையில் உள்ள அவரது வீடு, ஏற்கனவே வாங்கப்பட்ட அனுமதியை மீறி படிக்கட்டுக்கு கீழே கழிவறை அமைத்துள்ளதாகவும், வீட்டை அலுவலகமாக மாற்றி இருப்பதாகவும், வீட்டின் ஒருபகுதியை மும்பை மாநகராட்சி நிர்வாகம் குற்றம் சாட்டியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கங்கனா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், வழக்கு விசாரணைக்கு வருவதற்குள், கடந்த 9-ந்தேதி கங்கனாவின் வீட்டின் ஒரு பகுதியை மாநில அரசு இடித்தது. இது கடுமையான விமர்சனத்தை எழுப்பியது.
இது தொடர்பாக மாநில கவர்னரை சந்தித்து புகார் கொடுத்த கங்கனா, மும்பை உயர்நீதி மன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளார். ஏற்கனவே தொடரப்பட்டுள்ள வழக்கில், கங்கனாவின் வீட்டை இடிக்க நீதிபதி கதாவல்லா தலைமையிலான அமர்வு இடைக்கால தடை விதித்தது.
இந்த நிலையில், தற்போது, அந்த மனுவில், கங்கனா நேற்று திருத்தம் செய்து, நஷ்டஈடு கேட்டு மனுவை சமர்ப்பித்துள்ளார். அதில், பொதுமக்களை பாதிக்கும் சில விஷயங்களை கையாள்வது தொடர்பாக, சமீபத்தில் நான் தெரிவித்த கருத்துகளால், மராட்டிய மாநில அரசுடன் மோதல் ஏற்பட்டது. குறிப்பாக, அரசில் அங்கம் வகிக்கும் ஒரு அரசியல் கட்சியில் இருப்பவர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டது. அதன் விளைவாக, அந்த கட்சி ஆளுங்கட்சியாக உள்ள மும்பை மாநகராட்சி, என் பங்களாவை இடித்தது.
பங்களாவை பழுதுபார்க்க நான் 2018-ம் ஆண்டு அனுமதி பெற்றிருந்தேன். ஆனால், கடந்த 7-ந்தேதி மாநகராட்சி திடீரென நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு பதில் அளிக்க வெறும் 24 மணி நேரமே அவகாசம் அளிக்கப்பட்டது. அதற்குள் நான் பதில் அளித்தபோதிலும், அவசரகதியில் நிராகரிக்கப்பட்டது.
மறுநாளே மாநகராட்சி மற்றும் போலீஸ் அதிகாரிகள் பங்களாவை இடித்தனர். அவர்கள் ஏற்கனவே அங்குதான் முகாமிட்டு இருந்தனர். எனவே, பங்களாவை இடிக்க வேண்டும் என்ற உள்நோக்கம் மாநகராட்சியிடம் இருந்துள்ளது. அதன் செயலை ‘சட்ட விரோதம்’ என்று அறிவிக்க வேண்டும்.
மாநகராட்சி மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எனக்கு ரூ.2 கோடி இழப்பீடு அளிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த வழக்கு வரும் 22-ந்தேதி விசாரணைக்கு வருகிறது.