டெல்லி: இந்திமொழி நாட்டை ஒருங்கிணைக்கிறது, இந்திய கலாச்சாரத்தில் இருந்து அகற்ற முடியாத பகுதி, இந்தி மொழியுடன் பிராந்தி மொழிகளின் வளர்ச்சியும் இணையாக இருக்கும்  என உள்துறை அமைச்சர் அமித்ஷா  இந்தி தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்து  உள்ளார்.
இந்தி மொழி முதன்முதலில் இந்திய அரசியலமைப்பு சபையால் செப்டம்பர் 14, 1949 அன்று இந்திய குடியரசின் அதிகாரப்பூர்வ மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்தியாவின் உத்தியோகபூர்வ மொழியாக இந்தியைப் பயன்படுத்துவதற்கான முடிவு ஜனவரி 26, 1950 அன்று இந்திய அரசியலமைப்பால் சட்டப்பூர்வமாக்கப்பட்டது.

அன்றுமுதல்,  செப்டம்பர் 14-ந் தேதி இந்தி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.  இதையொட்டி பிரதமர் உள்பட பல்வேறு வடமாநில தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இந்தி தினத்தை முன்னிட்டு வாழ்த்துகளைத் தெரிவித்து வீடியோ வெளியிட்டு உள்ளார். இது தொடர்பாக இன்று காலை  தூர்தர்ஷனின் தேசிய சேனலில்  அமித்ஷாவின் உரை காலை 10.30 மணிக்கு ஒளிபரப்பப்பட்டது.

‘இந்தி திவாஸ்’ தினத்தையொட்டி அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,  இந்தியாவின் கலாசாரத்தில் இருந்து அகற்றவே முடியாதது இந்தி மொழி.  பல நூற்றாண்டுகளாக “முழு நாட்டை யும் ஒன்றிணைக்க” இந்தி செயல்பட்டு வருவதாகவும் கூறினார்.

“ஒரு நாடு அதன் எல்லை மற்றும் புவியியலால் அடையாளம் காணப்படுகிறது, ஆனால் அதன் மிகப்பெரிய அடையாளம் அதன் மொழி. இந்தியாவின் பல்வேறு மொழிகள் மற்றும் கிளை மொழிகள் அதன் பலமும் அதன் ஒற்றுமையின் அடையாளமும் ஆகும். கலாச்சார மற்றும் மொழியியல் பன்முகத்தன்மை நிறைந்த இந்தியாவில், ‘இந்தி’ முழு நாட்டையும் ஒன்றிணைக்க பல நூற்றாண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

“இந்தி என்பது இந்திய கலாச்சாரத்தின் உடைக்க முடியாத பகுதியாகும். இது சுதந்திரப் போராட்டத்திலிருந்து தேசிய ஒற்றுமை மற்றும் அடையாளத்தின் திறமையான மற்றும் சக்திவாய்ந்த ஊடகமாக இருந்து வருகிறது. இந்தியின் மிகப்பெரிய பலம் அதன் விஞ்ஞானம், அசல் தன்மை மற்றும் எளிமை”.

“மோடி அரசாங்கத்தின் புதிய கல்விக் கொள்கையுடன், இந்தி மற்றும் பிற இந்திய மொழிகளின் இணையான வளர்ச்சி இருக்கும்”.

மத்தியஅரசு அலுவலகங்களில் மற்ற மொழிகளோடு இந்தியையும் தொடர்பு மொழியாக பயன் படுத்த வேண்டும் என்று  மத்தியஅரசு ஊழியர்களுக்கு அமித்ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்.