டெல்லி: இந்தியாவில் உச்சகட்டமாக கடந்த 24 மணி நேரத்தில் 90,802 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் இவ்வளவு அதிகம் பேர் தொற்றுக்கு ஆளாகி இருப்பது இதுவே முதல் முறையாகும். இதனால், தொற்று பாதிப்பில் உலக அளவில் இந்தியா பிரேசிலை பின்னுக்குத் தள்ளி 2வது இடத்தை பிடித்துள்ளது.
இந்தியாவில் பொதுமுடக்கத்தில் இருந்து 90 சதவிகித தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, மக்கள் கொரோனாவோடு வாழ பழகிக்கொள்ளுங்கள் என்று மத்திய மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன. சமீபகாலமாக தொற்று பரவல் உச்சம் பெற்று வருகிறது. கடந்த மாதம் தினசரி 60ஆயிரம் பேர் பாதிப்பு என்ற அளவில் இருந்து வந்தது, தற்போது நாள் ஒன்றுக்கு 90ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியாகி வருகிறது.
இந்த நிலையில்,நேற்றைய தொற்று பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத்துறை இன்று காலை தகவல் வெளியிட்டு உள்ளது. அதன்படி, நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 90 ஆயிரத்து 802-பேர் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
அதுபோல கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் நிகழ்ந்த பலி எண்ணிக்கை 1,016 . இதன் மூலம் மொத்த சாவு எண்ணிக்கையும் 70 ஆயிரத்து 626 ஆக அதிகரித்து இருக்கிறது.
தற்போதைய நிலையில், தொற்று பாதிப்புடன் 8 லட்சத்து 82 ஆயிரத்து 542-பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை 32 லட்சத்து 50 ஆயிரத்து 429 பேர் தொற்றில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.