டெல்லி: ஐபிஎல் தொடருக்கான போட்டி அட்டவணை இன்று வெளியிடப்படும் என்று ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் பட்டேல் தெரிவித்துள்ளார். முதல் போட்டி ஏற்கனவே திட்டமிட்டபடி சிஸ்கே மும்பை இந்தியன்ஸ் மோதுமா அல்லது, போட்டியில் மாற்றம் ஏற்படுமா என்பது இன்று தெரிய வரும்.
கொரோனா பரவல் மற்றும் பொதுமுடக்கம் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரகத்தில் நடத்தப்பட உள்ளது. ஐபிஎல் டி20 தொடர் செப்டம்பர் 19 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டிகள் நவம்பர் 10 ஆம் தேதி நிறைவடைகிறது.
போட்டி தொடங்குவதற்கு முன்பாகவே, போட்டி அட்டவணை வெளியிடப்படும். ஆனால் அபுதாபி, துபாய், சார்ஜா போன்ற இடங்களில் இம்முறை போட்டி நடைபெற உள்ளதால் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டிய சூழலில் ஒரு இடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு எந்த ஒரு தடையும் இல்லாமல் வீரர்கள் சென்று வருவதற்கு ஒப்புதல் வாங்க வேண்டியது அவசியமாகியுள்ளது.
தற்போது துபாயில் தங்கியுளள ஐபிஎல் வீரர்கள் பயிற்சி ஆட்டத்தில் கலந்துகொண்டு, போட்டிக் காக வீரர்கள் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் ஐபிஎல் போட்டிக்கான அட்டவணை இன்று வெளியிடப்படும் என்று அதன் தலைவர் பிரிஜேஷ் பட்டேல் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் விதிமுறைகளுக்கு ஏற்ப தற்போதைய சாம்பியனும் 2-ம் இடம் பிடித்த அணியும் செப்டம்பர் 19ஆம் தேதி நடைபெற இருக்கும் முதல் ஆட்டத்தில் விளையாடுவார்கள்.
அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ள வேண்டும்.
சிஎஸ்கே அணி வீரர்கள் உள்பட பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ள நிலையில், முதல் ஆட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்று போட்டி அட்டவணை வெளியாக இருப்பதால், முதலில் ஆடப்போகும் அணிகள் எவை என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வமோடு காத்திருக்கின்றனர்.