மத்திய பிரதேசம்:
மத்திய பிரதேசத்தில் கால்நடைகளுக்கு வழங்கும் அரசி மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக பரவும் இந்த காலகட்டத்தில் மத்திய பிரதேச மாநிலத்தில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் மாவட்டங்களான பாலகாட் மற்றும் மண்டலாவிற்கு அரசு பொது விநியோக முறை மூலம் குதிரைகள் மற்றும் கால்நடைகளுக்கு ஏற்ற அரிசியை மக்களுக்கு வழங்கியுள்ளது.
கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வரும் மத்திய பிரதேச அரசுக்கு ஆகஸ்ட் 21-ஆம் தேதி இந்திய அரசின் நுகர்வோர் விவகார அமைச்சகத்தின் உணவு மற்றும் பொது வினியோகத் துறையில் சேமிப்பு மற்றும் ஆராய்ச்சி பிரிவு இந்த கடிதத்தை எழுதி உள்ளது.

மத்திய நுகர்வோர் விவகார அமைச்சகம் ஜூலை 30-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 2, 2020 வரை பழங்குடியினர் வசிக்கும் மாவட்டங்களான பாலகாட் மற்றும் மண்டலாவில் உள்ள நான்கு அரிசி கிடங்குகள் மற்றும் ஒரு நியாய விலை கடையிலிருந்து எடுத்த அரிசியை சோதனை செய்துள்ளனர்.
மத்திய தானிய பகுப்பாய்வு ஆய்வகத்தில் இந்த அரிசிகளை பரிசோதனை செய்ததில் அவை மனிதர்கள் உட்கொள்ள ஏற்றதல்ல என்றும் அந்த அரிசி குதிரைகள் மற்றும் கால்நடைகளுக்கு ஏற்றது என்றும் தெரியவந்துள்ளது.

சேகரிக்கப்பட்ட 32 மாதிரிகளின் விவரக்குறிப்புகளுடன் நுகர்வோர் விவகார அமைச்சகம் மத்திய பிரதேச அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. ஆனால் இதுபோன்ற எந்த கடிதமும் எங்களுக்கு வரவில்லை என்று தெரிவித்த மத்திய பிரதேச அரசு அவ்வாறு உண்மையாகவே நடந்திருந்தால் தவறு செய்த அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவித்துள்ளது.
இதனை சரமாரியாக விமர்சித்த காங்கிரஸ் கட்சி, ஆளும் கட்சி பெரும் விளம்பரங்களில் மட்டுமே கவனம் செலுத்துவதாகவும், குற்றம் செய்பவர்கள் தண்டிக்கப்படுவதில்லை என்றும் தெரிவித்துள்ளது. மேலும், இந்தப் பெரும் குற்றத்தை செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கோரியுள்ளது.
Patrikai.com official YouTube Channel