சென்னை: இ-பாஸ் பெற்று சென்னைக்கு வருபவர்களை தனிமைப்படுத்துங்கள் என்று மண்டல அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியாகி வருகிறது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,19,059-ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஒரு மாதமாக சென்னையில் தொற்று பாதிப்பு ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், தமிழகஅரசு இ-பாஸ் வழங்குவதில் தாராளம் காட்டியுள்ளதால், தினசரி ஆயிரக்கணக்கானோர் சென்னைக்கு வந்த வண்ணம் உள்ளனர். கடந்த 2 நாளில் மட்டுமே 14 ஆயிரம் பேருக்கு இ-பாஸ் வழங்கப்பட்டு உள்ளது. இதனால், வாகனங்களில் ஏராளமானோர் சென்னைக்கு வந்து குவிந்துள்ளனர். இதனால் சென்னையில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், இபாஸ் வழங்கப்பட்டு சென்னை வந்துள்ள நபர்களை கண்காணித்து தனிமைப் படுத்த நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஹர்மந்தர் சிங் அறிவுறுத்தியுள்ளார். மேலும், வேலைக்கு வருவோர் தகவலை மண்டல அதிகாரிகள் சேகரித்து மாநகராட்சி அலுவலர்களிடம் தெரிவிக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
இதுபோல சென்னை மாநகராட்சியும் அதிரடி உத்தரவிட்டு உள்ளது. அரசு அறிவித்துள்ள தளர்வு இ-பாஸ்களுக்குத்தான், அதில் வரும் நபர்களுக்கு இல்லை. அவர்கள் அனைவரும் கண்டிப்பாக 14 நாட்கள் வீடுகளில் தனிமைப்படுத்துதலில் இருக்க வேண்டும் என்று அறிவித்து உள்ளார்.