கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக மாவட்டத்தை விட்டு வெளியே இ-பாஸ் நடைமுறையை தமிழகஅரசு அமல்படுத்தியது. ஆனால், இடையில் பொதுமுடக்கத்தில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வணிக நிறுவனங்கள் செயல்பட அனுமதி வழங்கியதால், இ-பாஸ் நடைமுறையையும் எளிதாக்க வேண்டும் என பொதுமக்கள் உள்பட அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தன.
இதையடுத்து, தமிழகத்தில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் கிடைக்கும் என்ற அறிவிப்பு இன்று (திங்கட்கிழமை) முதல் அமல்படுத்தப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். மேலும், பொதுமக்கள் ஆதார் அல்லது ரேஷன் அட்டை விவரங்களுடன் தொலை பேசி எண்ணையும் சேர்த்து விண்ணப்பித்தால் எந்தவித தாமதமும் இல்லாமல் உடனுக்குடன் இ-பாஸ் வழங்கப்படும். பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்த்து, தவிர்க்க இயலாத பணிகளுக்கு மட்டும் விண்ணப்பித்து, இ-பாஸ் பெற்றுக்கொண்டு பயணிக்கலாம்” என கூறியிருந்தார்.