திருவனந்தபுரம்: ஆன்லைனில் தாங்கள் குறிவைத்து துன்புறுத்தப்பட்டதாக காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளனர் கேரளாவைச் சேர்ந்த 3 பத்திரிகையாளர்கள்.
மனோரமா செய்தியில் பணியாற்றும் நிஷா புருஷோத்தமன், ஏசியாநெட் செய்தியில் பணியாற்றும் கேஜி கமலேஷ், அதே ஏசியாநெட் செய்தியில் பணியாற்றும் பிரஜூலா கமலேஷ் ஆகியோர்தான் அந்தப் புகாரை அளித்த பத்திரிகையாளர்கள்.
கேரளாவை ஆளும் சிபிஐஎம் கட்சியின் ஆதரவாளர்கள்தான் இந்த செயலில் ஈடுபடுவதாக அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
கேரளாவை உலுக்கிய தங்கக் கடத்தல் வழக்கு, கொரோனா நோய் தொற்று, சமீபத்திய வெள்ளம் உள்ளிட்டவைகளை கவரேஜ் செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கையில், தாங்களும், தங்களின் குடும்பத்தாரும் குறிவைத்து, மேற்கண்ட நபர்களால் சமூக ஊடகங்களில் துன்புறுத்தப்படுவதாக தங்களின் புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தப் புகார், அந்த மாநிலத்தில் தற்போது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.