கோழிக்கோடு: கோழிக்கொடு விமான விபத்தில் 18 பேர் பலியான நிலையில், மீட்கப்பட்டவர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில் 2 பேருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து மலப்புரம் கலெக்டர் உள்பட மீட்பு பணியில் ஈடுபட்ட 600 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்திக்கொண்டதாக கூறப்படுகிறது.
குவைத்தில் இருந்து கேரளா வந்த ஏர் இந்தியா விமானம் கடந்த வாரம் கோழிக்கோடு விமான நிலையித்தில் தரையிறங்கும்போது, இரண்டாக உடைந்து விபத்துக்குள்ளானது. இதில், 2 விமானிகள், 4 விமானக்குழுவினர் மற்றும் 10 குழந்தைகள் உட்பட 184 பேர் விமானத்தில் இருந்துள்ளனர். இதில், 18 பேர் பலியான நிலையில், காயம் அடைந்த 127 பேர் கோழிக்கோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள 13 மருத்துவனைகளில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
விமானத்தில் பயணித்த பலர், கொரோனா தொற்று காரணமாக தங்களது வேலைகளை இழந்து தாயகம் திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. விமானத்தில் திரும்பிய அனைவருக்கும் கொரோனா தொற்று சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், மீட்பு நடவடிக்கைகளில் பணிபுரிந்த அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என கேரள சுகாதாரத் துறை வலியுறுத்தியது.
இதையடுத்து மலப்புரம் மாவட்ட கலெக்டர் கே.கோபாலகிருஷ்ணன் உள்பட மீட்பு பணியில் ஈடுபட்ட 600 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்திக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.