சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,96,901 ஆக அதிகரித்துள்ளது. அதிக பட்சமாக சென்னையில், தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 1,09,117 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் பல மாவட்டங்களில் அதிகரித்து வரும் நிலையில், தலைநகர் சென்னையில் கடந்த 3 நாட்களாக பாதிப்பு ஆயிரத்துக்கும் குறைந்து வருகிறது. அதே வேளையில் பாதிப்பில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
சென்னையில், நேற்று 989 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக சென்னையில் பாதிக்கப் பட்டோர் எண்ணிக்கை 1,09,117 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சென்னையில் மட்டும் 2,302 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதைய நிலையில் குணமடைந்தோர் எண்ணிக்கை 95,161 ஆக உயர்ந்துள்ள நிலையில், 11,654 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த கொரோனா பாதிப்பு விகிதங்கள் கடந்த 7 ஆம் தேதி 8% ஆகவும், கடந்த 6 ஆம் தேதி 9.4% சதவீதமாகவும் இருந்தது. இதன் மூலம் சென்னையில் பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. மேலும், இம்மாத இறுதிக்குள் சென்னையில் 6.5% ஆக கொரோனா பாதிப்பை குறைக்க வேண்டும் என்பதே இலக்காக வைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஜுன் 9ம் தேதி நிலவரப்படி, 1,09,117 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 95,161 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இது 87 சதவிகிதமாகும். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2,302 பேர் சிகிச்சைப் உயிரிழந்துள்ளனர். தற்போது 11,654 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
சென்னையில் மண்டல வாரியாக பார்த்தால், அதிகபட்சமாக அம்பத்தூர் மண்டலத்தில் 1,506 பேர் சிகிச்சையில் உள்ளனர். அதைத் தொடர்ந்து கோடம்பாக்கத்தில் 1,417 பேரும், அண்ணா நகர் மண்டலத்தில் 1,273 பேரும் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் சராசரியாக 14,000-12,000 கொரோனா பரிசோதனை நாள் தோறும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஜுலை மாத தொடக்கத்தில் 20.5 சதவிகிதமாக இருந்த தொற்று உறுதி செய்யப்படும் விகிதம் படிப்படியாக குறைந்து, ஜுலை மாத இறுதியில் 9 சதவிகிதமானது.
தொடர்ந்து ஆகஸ்டு மாதத்திலும் தொற்று எண்ணிக்கை குறைந்து வந்தது. இந்நிலையில், சென்னையில் கடந்த 8ம் தேதி 14,027 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 986 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.
இதன்மூலம் தொற்று உறுதி விகிதம் 7 ஆக பதிவானது. 9ம் தேதி நிலவரப்படி 12,792 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், 989 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தொற்று உறுதி விகிதம் 7.7 ஆக பதிவாகி உள்ளது. மேலும், சென்னையில் இரட்டிப்பாகும் நாட்களின் எண்ணிக்கையும் 72 நாட்களாக அதிகரித்துள்ளது.