லக்னோ
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்ட பெண் மூவருக்கு தண்டனை அளிக்கப்பட்ட பிறகு உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 6 ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மாலக்பூர் என்னும் சிற்றூரில் கமலேஷ் என்னும் பெண் காணாமல் போனதாக அவர் தந்தை சுரேஷ்குமார் என்பவர் புகார் அளித்தார். அவர் தனது மகளைக் கடத்தியிருக்கலாம் என 5 பேர் மீது புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் ஐவரும் கைது செய்யப்பட்டு அதில் இருவர் மீது வழக்கு பதியப்பட்டது.
இந்நிலையில் இந்த விசாரணை மெதுவாக நடப்பதாக கமலேஷின் தந்தை அளித்த புகாரின் பேரில் விசாரணை ஆதம்பூர் காவல்நிலைய அதிகாரி அசோக்குமாருக்கு மாற்றப்பட்டது. அப்போது அதிகாரிக்கு கமலேஷின் தந்தை தங்களை ஏமாற்றுவதாக சந்தேகம் எழுந்தது. அதையொட்டி சுரேஷ்குமார், கமலேஷ் சகோதரர் ரூப்கிஷோர் மற்றும் உறவினர் தேவேந்திரா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
காவல்துறையின குடும்பத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் கம்லேஷ் நடந்ததால் இம்மூவரும் அவரைச் சுட்டுக் கொன்று ஆற்றில் வீசிவிட்டதாக வழக்குப் பதிந்தனர். இதற்கு ஆதாரமாக கமலேஷின் உடைகள், ஒரு துப்பாக்கி, ஒரு ஜோடி செருப்புகள் அளிக்கப்பட்டன. மூவரும் தண்டனை பெற்று தற்போது சிறையில் உள்ளனர்.
இந்நிலையில் காவல்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கொலை செய்யப்ட்டாதாக கூறப்பட்ட கமலேஷ் தனது காதலர் வீட்டில் இருப்பதாகத் தெரிய வந்து அவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். தற்போது கமலேஷுக்கு ஒரு வயதில் மகன் உள்ளார். அவர் 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதையொட்டி காவல்துறையினர் கமலேஷ் இடம் இருந்து வாக்குமூலம் பெற்று தண்டனை பெற்ற மூவரையும் விடுவிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.