சென்னை:
வடசென்னையை கலக்கி வந்தவரும் போலீசாரால் தேடப்பட்டு வந்தவருமான பிரபல ரவுடி கல்வெட்டு ரவி பாஜவில் இணைந்தார். கட்சியில் தொடர்ந்து ரவுடிகளை இணைத்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு (2021) சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, அரசியல் கட்சிகள் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றன. கொரோனா காலக்கட்டத்திலும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவது உள்பட பல்வேறு பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்ற னர்.
இந்த நிலையில், தற்போது பாஜவில் வடசென்னையை கலக்கிய பிரபல ரவுடி ஒருவர் இணைந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வடசென்னையில் பிரபல ரவுடியாக வலம் வந்த கல்வெட்டு ரவி தான் அவர். அவருடன் மற்றொரு ரவுடி சத்யா(எ)சத்தியராஜ் என்பவரும் கட்சியில் சேர்ந்துள்ளார். கல்ெவட்டு ரவி, சத்தியராஜ் ஆகியோர் நேற்று பாஜ தலைமை அலுவலகத்தில் பாஜ பொது செயலாளர் கருநாகராஜன் முன்னிலையில் பாஜவில் இணைந்தனர். இது கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கட்சியில் இணைந்த பிரபல ரவுடி ரவி (எ) கல்வெட்டு ரவி(எ)ரவிசங்கர் (42), மீது கேளம்பாக்கம் கன்னியப்பன் கொலை, தண்டையார்பேட்டை வீனஸ் படுகொலை, ராயபுரம் பிரான்சிஸ் படுகொலை, பொக்கை ரவி கொலை, வண்ணாரப்பேட்டை சண்முகம் படுகொலைகள் என மொத்தம் 6 படுகொலைகள் உள்பட 35 வழக்குகள் உள்ளது. மேலும் 6 முறை குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டவர். கல்வெட்டு ரவி, தண்டையார்பேட்டை வஉசி நகர் 55 வது பிளாக்கில் வசித்து வந்தார். ரவுடிகளின் குற்றங்களுக்கு ஏற்ப, அவர்களை போலீசார் வகைப்படுத்தி வைத்துள்ளனர். அவர்களில் கொடூரமான குற்றவாளிகள் பட்டியலில் உள்ளவர்களை ஏ பிளஸ் பிரிவில் சேர்ப்பார்கள். அதில் கல்வெட்டு ரவியும் ஏ பிளஸ் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தான். கடந்த சில ஆண்டுகளாக இவன் குற்றங்களை செய்து வந்தாலும், அவன் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருந்தனர்.
இந்தநிலையில் கடந்த மாதம் அதிகாரிகள் மாற்றம் நிகழ்ந்த பிறகு ரவுடிகள் மீதான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. அதில் கல்வெட்டு ரவியையும் போலீசார் தீவிரமாக தேடத் தொடங்கினர். ஏ பிளஸ் பிரிவில் உள்ள ரவுடிகளிடம் எப்போதும் துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் இருக்கும். இதனால் அவர்களை பிடிக்கும்போது தங்களை தற்காத்துக் கொள்ள ஆயுதங்களால் ரவுடிகளை உயிருடனோ, பிணமாகவோ பிடிக்கலாம். இதனால், ரவுடி கல்வெட்டு ரவியையும் தனிப்படை போலீசார் தேடத் தொடங்கினர். கல்வெட்டு ரவியும், காக்கா தோப்பு பாலாஜி என்ற ரவுடியும் எதிர்க்கோஷ்டிகளாக செயல்பட்டு வந்தனர். ஒருவரை ஒருவர் தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டியிருந்தனர். பின்னர் காக்கா தோப்பு பாலாஜியும், ரவுடி சிடி மணியும் ஒன்று சேர்ந்ததால், எப்படியும் தன்னை தீர்த்துக் கட்டுவார்கள் என்று நினைத்திருந்தான். இதனால் அரசியலில் சேர முடிவு எடுத்ததால் காக்காதோப்பு பாலாஜியுடன் சமரசத்தில் ஈடுபட்டுள்ளான். அவனிடம் வாக்குறுதி வாங்கிய பிறகு தற்போது கட்சியில் சேர முடிவு எடுத்துள்ளான்.
அதேநேரத்தில், எப்படியாவது போலீசார் நம்மை சுட்டுப் பிடிக்க வாய்ப்பு உள்ளது என்பதைத் தெரிந்து கொண்டு வடசென்னையில் உள்ள பிரபல வக்கீலும், பாஜ பிரமுகருமானவர் மூலம் கட்சியில் இணைந்துள்ளான். அவனுடன் கூட்டாளி ரவுடி சத்தியராஜ்(28) என்பவனும் சேர்ந்துள்ளான். அவன் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 10 வழக்குகள் நிலுவையில் உள்ளன. 2 முறை குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வந்துள்ளான். போலீசாரால் தேடப்பட்டு வந்த ரவுடிகள் இருவரும் பாஜவில் இணைந்துள்ளது சென்னை போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலத்தில் சில நாட்களுக்கு முன்னர் வழிப்பறி, ஆள்கடத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பல வழக்குகளில் தொடர்புடைய ரவுடி முரளீதரன், பாஜவில் இணைந்து இளைஞர் அணியில் பதவி வாங்கினான். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் கல்வெட்டு ரவி, சத்தியராஜ் ஆகியோர் கட்சியில் சேர்ந்துள்ளனர். இதற்கிடையில், கூடுவாஞ்சேரி, படப்பை உள்ளிட்ட இடங்களில் நடந்த 3 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட ஜோஷ்வா என்ற ரவுடி இரு நாட்களுக்கு முன்பு பாஜ தேசிய செயற்குழு உறுப்பினர்கள் முன்னிலையில் கட்சியில் சேர்ந்துள்ளார்.
50 கொலை ரவுடிக்கு எதிர்ப்பு
தென்சென்னையை கலக்கி வரும் பிரபல ரவுடி நெடுங்குன்றம் சூர்யா. இவன் மீது 6 கொலை வழக்கு உள்ளிட்ட 50 வழக்குகள் உள்ளன. இவனது கூட்டாளிகள் ஓட்டேரி கார்த்திக், ராஜசேகர், மேத்யூ ஆகியோர் ஒன்றாக செயல்பட்டு வருகின்றனர். இவர்களது கோஷ்டிக்கும், பிரபல ரவுடி சீசிங் ராஜா, கொக்கி வினோத் ஆகியோ ரவுடி கோஷ்டிகளுக்கிடையே மோதல் எழுந்துள்ளது. இரு தரப்பிலும் பல கொலைகளை செய்துள்ளனர். இதனால் ஒருவரை ஒருவர் தாக்குவதற்கு சமயம் பார்த்து வருகின்றனர். சூர்யா, கடந்த ஒன்னறை ஆண்டுகளாக சிறையில் இருந்து விட்டு கடந்த மாதம்தான் சிறையில் இருந்து வெளியில் வந்தான். அவனும் பாஜவில் சேர விருப்பம் தெரிவித்தான். ஆனால் அவன் பல வழக்குகளில் தேடப்பட்டு வருவதும், அவனது உயிருக்கு ஆபத்து இருப்பதும் தெரிந்ததால், அவனை கட்சியில் சேர்க்க சில மூத்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கடைசி நேரத்தில் அவன் சேரவில்லை என்று கூறப்படுகிறது.