ஜெய்ப்பூர்: தங்களிடம் பெரும்பான்மை பலம் இருப்பதாகவும், வரும் 14ம் தேதி கூடவுள்ள ராஜஸ்தான் சட்டசபை கூட்டத்தொடரை எதிர்நோக்கி காத்திருப்பதாகவும் கூறியுள்ளது காங்கிரஸ் கட்சி.
இதுதொடர்பாக அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் அஜய் மக்கான் கூறியுள்ளதாவது, “நாங்கள் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு தயாராக உள்ளோம். ஆனால், எதிரணியினருக்கு எங்களுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரும் தைரியமில்லை.
எண்ணிக்கை எங்களிடம் உள்ளது. பெரும்பான்மை எங்களிடம் உள்ளது; இது அனைத்தையும் தாண்டி உண்மை எப்போதும் எங்களிடம் உள்ளது. சட்டசபை அமர்வை நடத்த விரும்பினோம் நாங்கள். ஆனால், எங்களுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொணரும் தைரியம் அவர்களிடம் இல்லை.
கலகத்தில் ஈடுபட்ட சட்டமன்ற உறுப்பினர்களை மீண்டும் ஏற்றுக்கொள்வதென கட்சித் தலைமை முடிவுசெய்தால், அம்முடிவை தான் ஏற்றுக்கொள்வதாக முதல்வர் அஷோக் கெலாட் தெரிவித்துள்ளார். எதிர்வரும் சட்டசபை கூட்டத்தொடரை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளோம்” என்றார்.