சேலம்: கர்நாடக அணைகளில் இருந்து அதிக அளவிலான தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 30 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை காரணமாக, கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை கொட்டி வருகிறது. மேலும், குடகு, மண்டியா, சாம்ராஜ் நகர் மற்றும் கேரளாவிலும் வயநாடு உள்பட சில பகுதிகளில் மழை தீவிரமடைந்து உள்ளது.
இதன் காரணமாக, கர்நாடகத்தில் உள்ள கபினி அணை, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைகள் நிரம்பும் தருவாயில் உள்ளதால், அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது.
கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு வரும் தண்ணீர் அனைத்தும் அப்படியே காவிரி ஆற்றில் திறந்துவிடப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், ஒகேனக்கல் பிரதான அருவி, ஐந்தருவி உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
நேற்று மாலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 3,625 கனஅடியாக இருந்த நிலையில் இன்று காலை 8 மணி அளிவல், தண்ணீர் வரத்து வினாடிக்கு 30 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 65.44 அடியாகவும், நீர்இருப்பு 28.99 டி.எம்.சி.யாகவும் இருக்கிறது.
தண்ணீர் அதிகமாக வருவதால், ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 1.35 அடி உயர்ந்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.