புதுச்சேரி
புதுச்சேரியில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது குறித்து நாளை அறிவிக்க உள்ளதாக முதல்வர் நாராயண சாமி கூறி உள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் இன்று கொரோனாவால் 121 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 3298 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 48 பேர் உயிர் இழந்துள்ளனர். இங்கு 1958 பேர் குணம் அடைந்து தற்போது 1292 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா அச்சம் காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு நாளையுடன் புதுச்சேரியில் முடிவடைகிறது.
இந்நிலையில் இன்று அம்மாநில முதல்வர் நாராயணசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தற்போது புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா இறப்பு விகிதம் 1.5 சதவீதமாக இருக்கிறது. அகில இந்திய அளவில் இறப்பு விகிதம் 2.5 சதவீதமாக இருந்தாலும் கூட நம்முடைய மாநிலத்தில் இறப்பை முழுமையாகக் கட்டுப்படுத்தவும், கரோனா பாதித்தவர்கள் குணமடைந்து வீட்டுக்குச் செல்லவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மத்திய அரசு நேற்று பல தளர்வுகளை அறிவித்துள்ளது. அதில் இரவு நேரத்தில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படுவதாகக் கூறியுள்ளது. மேலும் உடற்பயிற்சிக் கூடங்களைத் திறக்கவும், திரையரங்குகள், கலையரங்குகள், உணவகங்களில் உள்ள பார்களை மூடவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அத்துடன் அரசியல் கட்சிகளின் ஊர்வலம், பொதுக்கூட்டம் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக, கோயில் திருவிழாக்களை முழுமையாக ரத்து செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
வரும் ஆகஸ்ட் மாத இறுதியில் கொரோனா பாதிப்பு 6,000 வரை உயரும் என்றும், மிகப்பெரிய அளவில் பாதிப்பவர்கள் 2,600 பேர் வரை இருக்கும் என்றும் மருத்துவக் குழுவினர் கூறியுள்ளனர். அதையொட்டி சுகாதாரத்துறை ஆயத்தமாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தேவையான உபகரணங்கள், மருந்துகள் வாங்கவும், தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள், ஆஷா பணியாளர்கள், ஏ.எம்.என்கள், சுகாதாரத்துறை பணியாளர்களை நியமிக்கவும் தேவையான ஏற்பாடுகளை மருத்துவத்துறை செய்ய வேண்டும் என்று நாங்கள் உத்தரவிட்டுள்ளோம். விரைவில் அவர்கள் பணியமர்த்தப்படுவர்.
நமது மாநிலத்தில் கரோனா தொற்று வேகமாகப் பரவினால் அதனைத் தடுத்து நிறுத்த மருத்துவத்துறை மட்டுமின்றி மற்ற துறைகளும் இணைந்து செயல்படுவதற்கான ஏற்பாடுகளை மாநில அரசின் சார்பில் செய்து கொண்டிருக்கிறோம். அதற்குத் தேவையான உபகரணங்கள் வாங்க நிதி ஒதுக்கப்பட்டு, இப்போது அவை வாங்கப்பட்டு வருகின்றன. மேலும் வென்டிலேட்டர்கள், மானிட்டர்கள், கவச உடைகள், முகக்கவசங்கள், தேவையான மருந்துகளை வாங்க தேவையான அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
நமது மாநில அரசின் சார்பில் நாம் இவ்வளவு நடவடிக்கைகள் எடுத்தாலும் கூட மத்திய அரசின் ஒத்துழைப்பு நமக்குத் தேவை ஆகும் மத்திய அரசில் இருந்து வென்டிலேட்டர்கள், முழு கவச உடைகள் வந்துள்ளன என்றாலும் மற்ற உபகரணங்கள் கொடுக்க காலதாமதமாகிறது.
அத்துடன், மத்திய அரசு நமக்கு வழங்க வேண்டிய நிதியுதவி கிடைக்கவில்லை. அது குறித்த காலத்தில் கிடைத்தால்தான் தேவையான உபகரணங்களை வாங்கவும், மருத்துவர்களை நியமிப்பதற்கான வேலையையும் நாம் செய்ய முடியும். தற்போது, மாநில அரசின் நிதியில் இருந்து தான் அனைத்துப் பணிகளையும் நாம் செய்து வருகிறோம். புதுவை முதல்வரின் கொரோனா நிவாரண நிதியில் இருந்து ஆர்டிபிசிஆர் கருவிகள் வாங்குவதற்கு ரூ.1 கோடியே 20 லட்சம் ஒதுக்கி அந்தக் கருவிகள் வாங்கப்படுகின்றன.
தற்போதைய சூழலில் ஒருபுறம் மத்திய அரசின் விதிகளை நாம் கடைப்பிடிக்க வேண்டும், மற்றொருபுறம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். சோதனையான இந்த காலகட்டத்தில் புதுச்சேரி மாநில மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற முறையில், மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு தளர்வு, பக்கத்து மாநிலமான தமிழகத்தில் ஊரடங்கை ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை நீட்டித்திருப்பதையும் கருத்தில் கொண்டு, நம்முடைய மாநில அரசின் சார்பில் நாம் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து நாளை அறிவிப்பை வெளியிடுவோம்.
மக்களின் உயிர் முக்கியம் அத்துடன் அவர்களின் உயிருக்குப் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய கடமை, பொறுப்பு மாநில அரசுக்கு உண்டு. அதே வேளையில் நிதி ஆதாரத்தை ஒருபுறம் பெருக்க வேண்டும். இன்னொரு புறம் மக்களுக்கு மாநில அரசு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு நாளை அமைச்சரவையில் முடிவு செய்து அறிவிப்போம்.
கொரோனாவுக்கு மருந்து எப்போது கண்டுபிடிப்பார்கள் என்று தெரியவில்லை. பக்கத்து மாநிலமான தமிழகத்தில் தொடர்ந்து கரோனா அதிகரித்து வருகிறது. நம்முடைய மாநிலத்தில் அதனைக் கட்டுப்படுத்த அரசுக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும். கொரோனா பாதித்தவர்களின் வீடுகளை மட்டும் தனிமைப்படுத்த வேண்டும் என்ற முடிவை இப்போது எடுத்துள்ளோம். யார் வீட்டில் கரோனா உள்ளதோ அவர்களின் வீடு மட்டும் தனிமைப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்படும்.
மக்களின் சகஜ வாழ்க்கை இதனால் பாதிக்காது என்பதைப் புதுச்சேரி மாநில மக்கள் உணர்ந்துகொண்டு முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பதை உறுதியோடு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் கொரோனாவை புதுச்சேரி மாநிலத்தில் படிப்படியாக்க குறைக்க முடியும்” எனத் தெரிவித்துள்ளார்,