டெல்லி: கொரோனா பொது ஊரடங்கில் இருந்து நாடு முழுவதும் 3ம் கட்ட தளர்வுகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர் ஜூன் முதல் படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், ஊரடங்கின் 3 ஆம் கட்ட தளர்வுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் ஏற்கெனவே நடைமுறையில் இருந்த இரவு நேர ஊரடங்கு முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு மண்டலங்களில் இல்லாத உடற் பயிற்சி கூடங்கள் மற்றும் யோகா நிலையங்களை திறக்க ஆகஸ்ட் 5ம் தேதி முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகள், நீச்சல் குளங்கள், பூங்காக்கள், பார்கள் மற்றும் திரையரங்குகள் போன்றவற்றிற்கு ஆகஸ்ட் 31 வரை தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது.மெட்ரோ போக்குவரத்து, மக்கள் அதிகம் கூடும் நிகழ்வுகளுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளியுடன் சுதந்திர தின விழா கொண்டாடப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.