ஜான்சி
கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்த ஒருவர் தாம் உயிர் இழக்கும் முன்பு வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதைப் போல் கொரோனா மரணமும் அதிகரித்து வருகிறது. மத்திய மாநில அரசுகள் கொரோனா நோயாளிகளுக்குத் தேவையான வசதிகள் மருத்துவமனையில் உள்ளதாகத் தொடர்ந்து கூறி வருகின்றன. ஆனால் அவற்றை மறுக்கும் வண்ணம் ஒரு சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஜான்சி நகர அரசு மருத்துவமனையில் நிகழ்ந்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனா நோயாளி ஒருவர் தாம் இறக்கும் சில மணி நேரத்துக்கு முன்பு ஒரு வீடியோவில் பேசி அதை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சுமார் 52 நொடிகள் ஓடும் இந்த வீடியோவில் ஜான்சி அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் உள்ள அந்த நோயாளி பேசி உள்ளார். அந்த வீடியோவில் அவர் சுவாசிக்க சிரம்ப்ப்டுவதும் அவர் உடைகளில் ரத்தம் படிந்திருப்பதும் தெரிகின்றது. அப்போது அவர் அருகில் மேலும் பல நோயாளிகள் படுக்கைகளில் படுத்த படி உள்ளனர்
அவர்,”மருத்துவமனையில் தண்ணீர் தேவைகள் குறித்த ஏற்பாடுகள் கூட செய்யப்பட வில்லை. எனக்கு மிகவும் தொந்தரவாக உள்ளது. என்னை வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள், இந்த மருத்துவமனையில் எவ்வித ஏற்பாடுகளும் கிடையாது. இங்கு எல்லாம் அலட்சியமாகவே நடந்து வருகிறது” என கூறி உள்ளார்.
இது குறித்து மருத்துவமனை தலைமை அதிகாரி எவ்வித பதிலும் சொல்லாமல் உள்ளார். இந்த நோயாளியின் மனைவி மற்றும் மகள் ஆகியோரும் கொரோனா பாதிப்புக்காக வேறொரு பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு அறிகுறிகள் இல்லை எனவும் கூறப்படுகிறது. இந்த வீட்யோ கடும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.
பாஜக ஆளும் உபி அரசில் கொரோனா நோயாளிகளுக்குக் குடிக்கத் தண்ணீர் கூட தராத அவலநிலை உள்ளதாக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.