போபால்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மத்தியப்  பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் தொற்று குறித்து அஞ்ச வேண்டாம் எனக் கூறி உள்ளார்.

நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பல பிரபலங்களையும் தாக்கி உள்ளது.   அதில் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் ச்வுகானும் ஒருவர் ஆவார்.  இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு போபாலில் உள்ள சிராயு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.   அவர் ஒரு வீடியோ செய்தியை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், :எனது உடல்நிலை மிகவும் நன்றாக உள்ளது. .  தன்னலம் கருதாமல் உயிரைத் துச்சமாக நினைத்து கொரோனாவுக்கு எதிராகப் போரிடும் முன் களப் பணியாளர்களின் அர்ப்பணிப்பு விலை மதிக்க முடியாதது ஆகும்.  இவ்வாறு கொரோனா நோயாளிகளைக் காக்கப் பாடுபடும் மாநில கொரோனா தடுப்பு வீரர்களுக்கு நான் தலை வணங்குகிறேன்.

யாரும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் அது குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை.  யாரும் கொரோனா அறிகுறிகளை மறைக்கக் கூடாது.  அறிகுறி உள்ளோர் உடனடியாக மருத்துவர்களிடம் தெரிவித்து சிகிச்சை பெறத் தொடங்குங்கள்,  சரியான நேரத்தில் செய்யப்படும் சிகிச்சை உங்கள் உடல்நலனுக்குப் பாதுகாப்பு அளிக்கும்.

கொரோனாவை தடுக்க தற்போதுள்ள மூன்று பெரிய ஆயுதங்கள் சமூக இடைவெளி, அடிக்கடி கை கழுவுதல் மற்றும் முகக் கவசம் அணிவது ஆகியவை ஆகும்.  இந்த மூன்றையும் மக்கள் அவசியம் பின்பற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.  இந்த தகவலை உங்கள் அன்புக்கு உரியவர்களிடம் அவசியம் சொல்லி அவர்களையும் இவற்றை கடைப்பிடிக்கச் செய்யுங்கள்” என சிவராஜ் சிங் சவுகான் கூறி உள்ளார்.