சென்னை: 9மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் 2வது கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்வு பெறுகிறது.
தமிழ்நாட்டில் புதிதாகப் பிரிக்கப்பட்டதால், தேர்தல் நடத்தப்படாமல் இருந்த காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கான . ஊராட்சி உறுப்பினா், ஒன்றியக் குழு உறுப்பினா், ஊராட்சித் தலைவா் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தல் 2 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது.
முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்று முடிந்தது. இதில், 74.37% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக விழுப்புரத்தில் 81.36%, குறைந்தபட்சமாக செங்கல்பட்டு மற்றும் வேலூர் மாவட்டங்களில் தலா 67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
இதையடுத்து 2வது கட்ட தேர்தல் வரும சனிக்கிழமை (அக்டோபர் 9) நடைபெற உள்ளது. அத்துடன் 28 மாவட்டங்களில் காலியாக உள்ள உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பதவிக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தல் வரும் சனிக்கிழமையும் நடைபெற உள்ளது.
2-ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் இன்று மாலை 5 மணியுடன் பரப்புரை ஓய்கிறது. வெளியாட்கள் இன்று மாலை 5 மணிக்குள்ளாக வெளியேற மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இன்று முதல் 9-ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகளும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு தனியார் நிறுவனங்களும் விடுமுறை வழங்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.