டில்லி:

லைநகர் டில்லியில் இன்று  9-வது காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் தலைவர் நவீன் குமார் தலைமையில் தொடங்கியது. இந்த கூட்டத்தை தொடர்ந்து காவிரியில் தண்ணீர் திறந்து விட உத்தரவிடுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

காவிரி நதி நீர் விவகாரத்தில் உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பை தொடர்ந்து காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்றுக் குழுவை மத்திய அரசு கடந்த ஆண்டு அமைத்தது. அதைத்தொடர்ந்து காவிரி ஒழுக்காற்றுக்குழு  கூட்டம்  நடைபெற்று வருகிறது. இதுவரை 8 கூட்டங்கள் நடைபெற்று முடிந்த நிலையில் இன்று 9வது கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், தமிழகம், கர்நாடகம், புதுச்சேரி, கேரள மாநிலங்கள் சார்பாக பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

கடந்த கூட்டத்தின்போது,  ஜூன் மாதத்தில் 9.19 டிஎம்சி நீரை தமிழகத்துக்கு திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருந்த நிலையில், இதுவரை  1.7 டிஎம்சி நீரை மட்டுமே கர்நாடகா திறந்துவிட்டுள்ளது. இந்நிலையில் மீதமுள்ள நீரையும் திறந்துவிட கோரி தமிழகத்தில் வற்புறுத்தி உள்ளது.

இந்த நிலையில்,  அணைகளில் நீர் குறைவாக இருப்பதால் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது என ஒழுங்காற்று கூட்டத்தில் கர்நாடகா கூறிய நிலையில், அது தொடர்பான கடிதம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

மத்திய அமைச்சர் சதானந்தா கவுடா காவிரி மேலாண்மை வாரியத்துக்கும்  கடிதம் எழுதி உள்ளார்.

மேலும், மாண்டியா பகுதி விவசாயிகளுக்காக கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 2 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் – மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர செகாவத்துக்கும் சதானந்த கவுடா கடிதம் எழுதி உள்ளார்.

காவிரி மேலாண்மை ஆணையத்தில் மத்திய அமைச்சரின் தலையீடு சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.