சென்னை: தமிழக அரசின்  ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக நுரையீரல் பாதிக்கப்பட்ட நோயாளிகளில்  98 சதவிகிதம் பேர் தொற்று பாதிப்பில் இருந்து  மீண்டு இருப்பதாக ‘டீன்’ டாக்டர் ஜெயந்தி கூறியுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா தொற்று தீவிரமடைந்து வந்த நேரத்தில் சென்னையில் உள்ள  ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையும்,  சிறப்பு கொரோனா மருத்துவமனையாக கடந்த மார்ச்மாதம்  27–-ம் தேதி மாற்றப்பட்டது.  அங்கு கொரோனா நோயாளிகளுக்கு 750 படுக்கைகள் கொண்ட வார்டு அமைக்கப்பட்டது. அதில்,  500 படுக்கைகளில் ஆக்ஸிஜன் வசதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன்,  கொரோனா  தொற்று காரணமாக ஏற்படும் நுரையீரல் பாதிப்பை கண்டறிய ‘எக்ஸ்ரே’ மற்றும் ‘சி.டி ஸ்கேன்’ பரிசோதனை மிகவும் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவமனையின் டீன் ஜெயந்தி,  ஓமந்தூரால் அரசு மருத்துவமனையில் இதுவரை கொரோனா தொற்றுடன் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்ட 23,037 பேரில் 21,329 பேர் (92.6சதவீதம்) குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர்.  இதுமட்டுமின்றி, இதுவரை 38 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றுள்ளனர். இதுவரை 17 ஆயிரம் சிடிஸ்கேன், 16 ஆயிரம் எக்ஸ்ரே பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கு கொரோனாவுக்கு பிந்தைய நல்வாழ்வு மையத்தில் சிடி ஸ்கேன் பரிசோதனைகள் செய்ய தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் மூலம் 2 அதிநவீன 16 கூறு சிடி ஸ்கேன் கருவிகள் நிறுவப்பட்டுள்ளன. இதன்மூலம் கொரோனா தொற்றால் ஏற்படும் நுரையீரல் பாதிப்பில் இருந்து 98 சதவீதம் நோயாளிகள் மீண்டுள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

[youtube-feed feed=1]