சென்னை: மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின்  97வது பிறந்தநாள் இன்று உலகம் முழுவதும் உள்ள திமுகவினரால் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடம்  முரசொலி அலுவலகம், அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி படத்துக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

முதலில் மெரினாவில்உள்ள  கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செய்த முதல்வர், மரம் நட்டு, தமிழகம் முழுவதும் மரம் நடும் பணியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அங்குள்ள அறிஞர் அண்ணாவின் சமாதியிலும் மலர்வளையம் வைத்து மரியாதை செய்தார். தொடர்ந்து  பயனர்களுக்கு உதவி வழங்கினார். பின்னர், கலைஞரின் கோபாலபுர இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவ படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் கோடம்பாக்கம் வந்த ஸ்டாலின், அங்கு திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடானா முரசொலி அலுவலகம் வந்து, அங்கு கருணாநிதி படத்துக்கு மலர் தூவி மரியாதை  செய்தார். தொடர்ந்து அண்ணா அறிவாலயத்தில் கலைஞரின் உருவப்படத்திற்கும் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செய்தார்.

இந்த நிகழ்ச்சிகளில் முதல்வருடன் மூத்த அமைச்சர்கள், திமுக எம்.பி. கனிமொழி, இளைஞர் அணி தலைவரும் எம்எல்ஏவுமான உதயநிதி உள்பட திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டு, மரியாதை செலுத்தினர்.