டெல்லி:
இந்தியாவில் கொரோனா பரவலுக்கு அச்சாரமிட்ட, டெல்லி தப்லீஹி ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்ட 960 வெளிநாட்டினர் 10 ஆண்டுகள் இந்தியாவுக்கு வர மத்திய அரசு தடை விதித்து உள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவலுக்கு டெல்லியில் நடைபெற்ற நிசாமுதீன் தப்லிகி ஜமாத் மாநாடு ஹாட்ஸ்பாட் டாக கண்டறியப்பட்டது. அதையடுத்து, அங்குள்ளவர்கள் வெளியேற்றப்பட்டு, வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டனர்.
இந்த மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் மூலம் நாடு முழுவதும் கொரோனா பரவியது. அதையடுத்து, அவர்களை கண்டுபிடித்து தனிமைப்படுத்தும் பணி நடைபெற்றது.
இது தொடர்பாக வழக்குகள் பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் பலர் டூரிஸ்ட் விசா மூலம் வந்து மத நிகழ்வுகளில் கலந்துகொண்டது தெரிய வந்தது. டெல்லி காவல்துறையின் குற்றப்பிரிவு தப்லிகி ஜமாத் உறுப்பினர்களின் நிதி தொடர்பான பல ஆவணங்களை சேகரித்ததுடன், ஜமாத் தலைவர் மவுலானா சாதின் ஐந்து நெருங்கிய நண்பர்களின் பாஸ்போர்ட்டுகளையும் பறிமுதல் செய்தது.
இந்த விவகாரம் பூதாகரமாக கிளம்பிய நிலையில், நிசாமுதீன் தப்லிகி ஜமாத் தலைவர் மவுலானா சாதிடம் வெளிநாட்டு நிதி மற்றும் ஹவாலா இணைப்புகள் தொடர்பான விஷயங்களில் சிபிஐ விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் அமலாக்க இயக்குநரகத்திடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தப்லிகி மாநாட்டில் கலந்துகொண்ட 960 வெளிநாட்டினரின் விசா ஏற்கனவே ரத்து செய்யப்பட்ட நிலையில், அவர்கள் , மீண்டும் இந்தியா வர 10 ஆண்டு தடை விதித்து மத்திய உள்துறை அறிவித்து உள்ளது.