சென்னை

மிழகத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் 950 பேர் போட்டி இடுகின்றனர். 

 

நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் வரும் 19 ஆம் தேதி ஒரேகட்டமாகத் தேர்தல் நடைபெற்று வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

கடந்த 20 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி 27 ஆம் தேதி மாலை 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. தமிழகத்தில் மொத்தம் 1,749 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். வேட்பாளர்கள் கொடுத்த ஆவணங்கள் தேர்தல் நடத்தும் அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டது.

அவற்றில் 664 மனுக்கள் நிராகரிக்கப்பட இறுதியில் தமிழகத்தில் 39 தொகுதிகளில் 1 ஆயிரத்து 85 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. நேற்று மாலை 5 மணி வரை வேட்பு மனுக்களைத் திரும்பப்பெற அவகாசம் கொடுக்கப்பட்டிருந்ததால் 135 பேர் தங்கள் வேட்புமனுக்களைத் திரும்பப்பெற்றனர்.

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள பட்டியலின்படி, தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 950 பேர் போட்டியிடுகின்றனர். இதில், 874 பேர் ஆண்கள், 76 பேர் பெண்கள் ஆகும். அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 54 வேட்பாளர்களும், குறைந்தபட்சமாக நாகை தொகுதியில் 8 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.