சென்னை:
சென்னையில் மெட்ரோ ரயில்சேவையை நாடும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், கடந்த 5 மாதங்களில் மட்டும் 95 லட்சம் பயணிகள் புறநகர் மின்சார ரயில் சேவை யினை தவிர்த்து உள்ளதாகவும், தினசரி 60ஆயிரம் பயணிகள் குறைந்து வருவதாகவும் தெற்கு ரயில்வே தெரிவித்து உள்ளது.
சென்னையில் இயக்கப்படும் மெட்ரோ ரயிலில் பயணிகள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதன் சேவையையும் மெட்ரோ ரயில் நிர்வாகம் ஆகஸ்டு26 முதல் அதிகரித்து உள்ளது. அதன்படி, புளூ லைன் (வண்ணாரப்பேட்டை – விமானநிலையம் வழி எல்ஐசி) வழித்தடத்தில் 7 நிமிடங்களுக்கு ஒரு ரயில் சர்வீசும், கிரீன் லைன் ( சென்னை சென்ட்ரல் – பரங்கிமலை ) வழித்தடத்தில் 14 நிமிடங்களுக்கு ஒருமுறையும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதன் காரணமாக பெரும்பாலான பயணிகள் மெட்ரோ ரயிலுக்கு மாறி வருகின்றனர். இதன் காரணமாக புறநகர் மின்சார ரயில்களில் நாள் ஒன்றுக்கு சுமார் 60ஆயிரம் பயணிகள் வருகை குறைந்து விட்டதாக தெற்கு ரயில்வே தெரிவித்து உள்ளது.
கடந்த ஆண்டு கால பட்டியலுடன் ஒப்பிடும்போது, ஏப்ரல் முதல் ஆகஸ்டு ஆகிய 5 மாதங்களில் மட்டும் சுமார் 95 லட்சம் பயணிகளை சென்னை புறநகர் மின்சார ரயில் இழந்துள்ளதாக அதிகாரப் பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது சுமார் 40% அதிகமான புறநகர் ரயில்களை தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
குறிப்பாக சென்னை – தாம்பரம் ரயில் சேவையிலேயே அதிக பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாகவும், மெட்ரோ ரயில் நிலையங்கள் தூய்மை மற்றும் குளிரூட்டப்பட்ட ரயில் பெட்டிகள், அதிவேக பயணம் போன்றவை பயணிகளை வெகுவாக ஈர்த்து வருவதாக கூறப்படுகிறது.
“தினமும் சுமார் 25,000 முதல் 30,000 பேர் புறநகர் ரயில்களிலிருந்து மெட்ரோ ரெயிலுக்கு மாறி வருவதாகவும் கூறப்படுகிறது.