சென்னை; தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், பருவமழையை எதிர்கொள்ள சென்னையில் 900 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 40 படகுகள் தயார் நிலை யில் உள்ளதாக பேரிடர் மீட்பு துறை தெரிவித்து உள்ளது.

சென்னையில் மழைநீர் தேங்காதவாறு ரூ.500 கோடியில் மழைநீர் வடிகால் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக திமுக அரசு கூறினாலும், பல பகுதிகளிலும், சாலைகளிலும் மழைநீர் தேங்குவது தொடர்கிறது. இதன் காரணமாக, மழைநீரை உடனுக்குடன் வெளியேற்ற மாநகராட்சி 300க்கும் மேற்பட்ட நீர் இறைப்பு இயந்திரங்களை வாங்கி தயார் நிலையில் வைத்துள்ளது. மேலும், மழைநீர் தேங்கும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள மக்களை மீட்க படகுகளும் யார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.
வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, சென்னை மாநகர் முழுவதும் மழை பெய்து வருகிறது. இதையடுத்து, மழை வெள்ளத்தில் சிக்குபவர்களை மீட்பதற்கு வசதியாக 900 தீயணைப்பு வீரர்கள் உடன் 40 படகுகள் தயாராக உள்ளதாகவும், காவல் துறை மற்றும் மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைகளுடன் தீயணைப்பு வீரர்கள் இணைந்து செயல்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னையில் தீயணைப்பு துறை இணை இயக்குனர் பிரியா ரவிச்சந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் 24 மணி நேரமும் உஷாராக இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
சென்னையில் உள்ள 42 தீயணைப்பு நிலையங்களிலும் நிலைய அதிகாரிகள் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். ‘
மழையால் ஏற்படும் பாதிப்பு, மரங்கள் உடைந்து விழுதல் உள்பட சென்னை மாநகர் முழுவதும் வெள்ளத்தில் சிக்குபவர்களை மீட்பதற்கு வசதியாக 40 படகுகள் தயாராக உள்ளன.
அதே போன்று தேங்கிய தண்ணீரை வெளியேற்ற 40 மின்மோட்டார்களையும் தீயணைப்பு அதிகாரிகள் தயார்படுத்தி வைத்து உள்ளனர்.
தீயணைப்பு துறையில் பணியில் உள்ள அதிகாரிகள் முதல் களப்பணியாற்றும் வீரர்கள் வரை அத்தனை பேரும் மழை வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை காப்பதற்கு வசதியாக 24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மழைநீங் தேங்க வாய்ப்பு உள்ள இடங்களாக தேர்வு செய்யப்பட்டு உள்ள 17 இடங்களில் தீயணைப்பு வீரர்கள் முகாமிட்டு உள்ளதாகவும், அதிகாரிகள், தீயணைப்பு வீரர்கள் என 900 பேர் 24 மணி நேரமும் பணியில் உள்ளதாக தீயணைப்பு துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.