வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள பெண்களுக்கு இலவச சிலிண்டர் வழங்கும் பிரதம மந்திரியின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சிலிண்டர்களை 90 லட்சம் பேர் இரண்டாவது சிலிண்டர் வாங்கவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் நீமூச் நகரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சந்திரசேகர் கவுர் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்ட மூலம் அனுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதிலளிக்கப்பட்டுள்ளது.

உஜ்வாலா திட்டத்தின் கீழ் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள பெண்கள் சுமார் 8.99 கோடி பேர் பயனாளிகளாக உள்ளனர். இதில், 90 லட்சம் பேர் தங்களுக்கு கிடைத்த முதல் இலவச சிலிண்டருக்கு பின் அடுத்ததாக சிலிண்டரே வாங்கவில்லை என்றும், 1.08 கோடி பேர் கடந்த ஓராண்டில் ஒரே ஒருமுறை மட்டுமே சிலிண்டர் வாங்கியதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 65 லட்சம் பேரும், பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் 9.175 லட்சம் பேரும், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் 15.9 லட்சம் பேரும் முதல் முறை இலவச சிலிண்டர் வாங்கிய பின் அடுத்த சிலிண்டர் வாங்கவில்லை என்று தகவலளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள பயனாளிகள் சிலரை தொடர்பு கொண்டு டைம்ஸ் ஆப் இந்தியா நடத்திய ஆய்வில் :

“முதல் முறை அரசு எனக்கு இந்த சிலிண்டரை இலவசமாக வழங்கியது. இரண்டாவது சிலிண்டர் வாங்க என்னிடம் போதிய பணம் இல்லை.

எனது இரண்டு மகன்களில் ஒருவன் இறந்துவிட்டான், மற்றொருவன் கடந்த ஆறு ஏழு மாதங்களாக எங்கு சென்றான் என்றே தெரியவில்லை.

எனக்கு மாதாந்தோறும் கிடைக்கும் 600 ரூபாய் விதவை பென்ஷனில் நான் எனது வயிற்று செலவுக்கு போக மின் கட்டணம் கட்டுவதா அல்லது சிலிண்டர் வாங்குவதா ?” என்று 61 வயதாகும் பெண் ஒருவர் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

இதேபோன்ற நிலைமை தான் பல இடங்களில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2016 ம் ஆண்டு மோடி அரசால் கொண்டு வரப்பட்ட இந்த உஜ்வாலா திட்டல் இதுவரை சுமார் 9 கோடி பேர் பயனாளிகளாக உள்ளார்கள் என்பதும் இந்த திட்டத்திற்கு மட்டும் சுமார் 7700 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.