சென்னை: தமிழகம் முழுவதும்  கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் 90 அணைகள் 891 குளங்கள் நிரம்பின என்றும், நீர் நிலைகளில் 60 சதவகிதம் அளவுக்கு தண்ணீர் தேங்கி உள்ளது என்றும் தமிழ்நாடு அரசின் நீர் வளத்துறை அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை  தொடங்கியது முதலே கனமழை பெய்து வருகிறது. இதனால், அணைகள், நீர்த்தேக்கங்கள், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஏற்கெனவே நிரம்பியுள்ள நீர்நிலைகளுக்கு வரும் தண்ணீர் உபரி நீராக அப்படியே வெளியேற்றப்படுகிறது. உபரிநீர் வெளியேறும் நீர்நிலைகளை உன்னிப்பாக கண்காணிக்க அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அணைகள், குளங்களில் உள்ள நீர் இருப்பு குறித்து தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை விவரம் வெளியிட்டு உள்ளது.

இதுதொடர்பாக நீர்வள ஆதாரத் துறை  சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,  தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி மண்டலங்களில் உள்ள 90 அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் மொத்த கொள்ளளவு 2 லட்சத்து 24,927 மில்லியன் கனஅடியாகும்.

நேற்றைய நிலவரப்படி 1 லட்சத்து 33,661 மில்லியன் கனஅடி (59.59 சதவீதம்) நீர் இருப்பு உள்ளது.

மாநிலம் முழுவதும் 38 மாவட்டங்களில் மொத்தம் 14,139 குளங்கள் உள்ளன. இவற்றில் 891 குளங்கள் முழுவதுமாக நிரம்பியுள்ளன.

அதில், அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 310 குளங்கள் நிரம்பியுள்ளன

. 1,832 குளங்களில் 99 சதவீதமும், 2,096 குளங்களில் 51 முதல் 75 சதவீதமும்,

2,801 குளங்களில் 26 முதல் 50 சதவீதமும்,

4,949 குளங்களில் ஒன்று முதல் 25 சதவீதமும் நீர்இருப்பு உள்ளது.

1,570 குளங்கள் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கின்றன.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.