சிவகங்கை:
தமிழ்நாட்டில் 2000ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை 9 லட்சம் பேர் விவசாயத்தை கைவிட்டதாக விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கடந்த 2000ம் ஆண்டில் ல் 67 லட்சம் எக்டேரில் விவசாய சாகுபடி நடந்தது இதில் 37 லட்சம் ஹெக்டேர் இறவை சாகுபடி யாகவும், 30 லட்சம் எக்டேர் மானாவாரியாகவும் இருந்தன.
அந்த காலகட்டத்தில் மொத்தம் 90 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விவசாயம் செய்தனர். லாபம் குறைந்தது, நகரம் விரிவடைந்து விவசாய நிலம் குறைந்தது, விவசாயத் தொழிலாளர் பற்றாக்குறை, தொடர் வறட்சி, காவிரி, முல்லை பெரியாறு அணை பிரச்னை, நிலத்தடிநீர் குறைவு, கடன் பிரச்சினை, நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு போன்ற காரணங்களால் கடந்த 17 ஆண்டுகளில் 9 லட்சம் பேர் விவசாயத்தை கைவிட்டனர்.
ஆகவே தற்போது சாகுபடி பரப்பும் 60.74 லட்சம் எக்டேராக குறைந்துவிட்டது. விவசாயிகள் எண்ணிக்கையும் 81.18 லட்சமாக குறைந்துவிட்டது. தவிர இவர்களில் பலர் தங்களது நிலங்களை பிறருக்கு குத்தகைக்கு கொடுத்துவிட்டு, பெயருக்கு மட்டுமே விவசாயிகளாக இருக்கிறார்கள்.
தமிழ்நாடு அனைத்துவிவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் ஆதிமூலம் இது குறித்து பேசும்போது, “ அரசு வருடம்தோறும் சாகுபடி பரப்பு, உணவு உற்பத்திக்கு இலக்கு நிர்ணயிக்கிறது. ஆனால் விவசாயத்தை மீட்பதற்கான நீண்டகால திட்டம் எதுவும் கிடையாது. நீர் மேலாண்மை முறையாக செயல்படுத்தவில்லை. இதனால் நிலத்தடிநீர் மட்டம் குறைந்து, கிணற்று பாசன சாகுபடி பரப்பும் கூட குறைந்து கொண்டே வருகிறது.
காவிரி, முல்லை பெரியாறு பிரச்னை தீராததால், அதை நம்பியிருந்த பல விவசாயிகள் வேறுதொழிலுக்கு மாறிவிட்டனர். நீர்நிலைகளை பாதுகாக்க அரசு தவறிவிட்டது. மானியங்கள் கடைமட்ட விவசாயி வரை சென்றடைவது கிடையாது. லாபம் இல்லாத தொழிலாக மாறிவிட்டது. இதனால் ஆண்டுதோறும் பல ஆயிரம் விவசாயிகள் விவசாயத்தை கைவிட்டு வருகின்றார்கள்” என்று தெரிவித்தார்.