சென்னை: தமிழ்நாட்டில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைவில் தேர்தல் நடத்தப்படும் என சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட ஊரக வளர்ச்சித்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபையில் இன்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதையொட்டி, அது தொடர்பான கொள்கை விளக்க குறிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதில்,  9 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் வார்டு மறுவரையரை செய்ய வேண்டி இருந்ததால் தேர்தல் நடக்காமல் இருந்தது. தற்போது இவற்றிற்கு தேர்தல் விரைவில் நடத்தப்படும். ஆனால் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்ட பின்னரே நாகப்பட்டினம் மாவட்டம் 2ஆக பிரித்து மயிலாடுதுறை மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டதால்  மயிலாடுதுறை மாவட்டத்திற்காக தனியாக தேர்தல் நடத்தப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் புதிதாக உருவாக்கப் பட்டதால் வார்டு வரையறை நடைபெறக்கூடிய சூழல் ஏற்பட்டது.

மற்ற மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல், கடந்த 2019ஆம் ஆண்டில் நடத்தி முடிக்கப்பட்டது. இந்நிலையில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைவில் தேர்தல் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

செப்.15-க்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என, மாநில தேர்தல் ஆணையத்திற்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதையடுத்து, விடுபட்ட ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளில், மாநில தேர்தல் ஆணையம் கவனம் செலுத்தி வருகிறது. அதன்படி, தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமிக்க ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.