சென்னை: தமிழ்நாட்டில் 9மாவட்ட உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், இந்த தேர்தலை ஒரே கட்டமாக நடத்த உத்தரவிட வேண்டும் என அதிமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுஉள்ளது.
இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் இன்பதுரை வழக்கு தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில், 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் கடந்த 13ஆம் தேதி அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.
சட்டசபை தேர்தலையே ஒரே கட்டமாக நடத்தியுள்ள நிலையில். இந்த 9 மாவட்டங்களுக்கு 2 கட்டமாக தேர்தல் நடத்த எந்த அவசியமும் இல்லை. மொத்தமே 14 ஆயிரத்து 573 வாக்குச்சாவடிகளில்தான் தேர்தல் நடைபெறவுள்ளன. இந்த 9 மாவட்டங்களில் 2 கட்டமாக தேர்தலை நடத்தினால் ஆளுங்கட்சி சார்பில் கள்ள ஓட்டு போடுதல் உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட வாய்ப்புள்ளது. 2 கட்ட வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை, முடிவுகள் அறிவிப்பு என்பது தொடர்ச்சியாக இல்லாமல் குறிப்பிட்ட இடைவெளியுடன் தள்ளி வைக்கப்பட்டிருப்பதும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
2 கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டால் அது நேர்மையாகவும், ஜனநாயக ரீதியாகவும் நடக்காது. இந்த 9 மாவட்டங்களிலும் எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்ற நோக்கில் ஆளுங்கட்சியினர் அதிகார துஷ்பிரயோகங்களிலும், ஜனநாயக விரோத நடவடிக்கைகளிலும் ஈடுபடுவார்கள்.
இந்த தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்கவும், கொரோனா விதிகளை கண்டிப்பான முறையில் அமல்படுத்தவும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த 14ஆம் தேதி மாநில தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளார். அதில், உள்ளாட்சி தேர்தலுக்கு வெளிமாநில மத்திய அரசு பணியாளர்களை தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்க வேண்டும். தேர்தல் பணிக்கு மத்திய ரிசர்வ் படையை பணியமர்த்த வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் முன் வைத்துள்ளார். இதற்கு முந்தைய தி.மு.க., ஆட்சிக்காலத்தில் உள்ளாட்சி தேர்தலில் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. எனவே, இந்த உள்ளாட்சி தேர்தலை 2 கட்டமாக நடத்தினால் மீண்டும் வன்முறை வெடிக்கும் என்பதால் ஒரே கட்டமாக நடத்த உத்தரவிட வேண்டும்.
இதுதொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் அளித்துள்ள கோரிக்கை மனுவை பரிசீலிக்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். இந்த தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெற தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு இன்று அல்ல திங்கட்கிழமை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.