பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மீது இந்திய ஆயுதப் படைகள் ஏவுகணைத் தாக்குதல் நடத்திய நிலையில் காஷ்மீர், பஞ்சாப், குஜராத் உள்ளிட்ட பல்வேறு வட மாநிலங்களில் உள்ள விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளது.
பயங்கவரவாதத்துக்கு எதிராக உலகெங்கும் பல்வேறு நாடுகளில் ராணுவ நடவடிக்கைகள் நடைபெற்று வரும் நிலையில் இந்தியாவும் இதை தொடங்கியுள்ளது.

கடந்த மாதம் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நேற்றிரவு குண்டுவீசி தாக்கியது.
இதையடுத்து, ஜம்மு, ஸ்ரீநகர், லே, ஜோத்பூர், அமிர்தசரஸ், புஜ், ஜாம்நகர், சண்டிகர் மற்றும் ராஜ்கோட் விமான நிலையங்கள் மே 10 ஆம் தேதி காலை 5:30 மணி வரை மூடப்பட்டுவதாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
வான்வெளி கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து, பல விமான நிறுவனங்கள் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளுக்கான சேவைகளை நிறுத்தி வைத்துள்ளன.
மேலும், மறு உத்தரவு வரும் வரை இந்த விமான நிலையங்களுக்கு தங்கள் விமான சேவைகள் நிறுத்தப்படுவதாக ஏர் இந்தியா, ஸ்பைஸ்ஜெட், இண்டிகோ ஆகிய விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
பாதிக்கப்பட்ட காலகட்டத்தில் பயணத்திற்கான செல்லுபடியாகும் டிக்கெட்டுகள் வைத்திருப்பவர்கள், மறு திட்டமிடல் கட்டணங்களில் ஒரு முறை விலக்கு அல்லது ரத்துசெய்தலுக்கான முழு பணத்தைத் திரும்பப் பெற தகுதியுடையவர்கள் என்று ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.