சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ. 9.5 கோடி மதிப்புள்ள கஞ்சாவை சாக்லெட்டுக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. அதை சுங்கத்துறை அதிகாரி கள் பறிமுதல் செய்தனர்.
தமிழ்நாட்டில் போதை பொருள் நடமாட்டம் தீவிரமாக உள்ள நிலையில், விமான நிலையங்கள், ரயில் நிலையங்களில் கஞ்சா, கோகைன் போன்ற போதை பொருட்கள் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், “தாய்லாந்து நாட்டிலிருந்து, சென்னைக்கு கடத்திக் கொண்டுவரப்பட்ட, ரூ.9.5 கோடி மதிப்புடைய, 9.5 கிலோ, ஹைட்ரோபோனிக், உயர் ரக கஞ்சா சாக்லேட்டில் மறைத்து வைத்து எடுத்து வரப்பட்டது. இது சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே வெளிநாடுகளில் இருந்து OG என்று அழைக்கப்படும் ஹைட்ரோபோனிக் கஞ்சா உணவுபொருட்களுடன் பாக்கெட்டுகளில் கடத்தி வந்தது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதாவது, காற்று புகாத பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்டு, பழச்சாறுகள், சாக்லேட்டுகள் அல்லது சாப்பிடத் தயாராக இருக்கும் காலை உணவுப் பொருட்களின் டெட்ரா பாக்கெட்டுகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டு கடத்தப்பட்டு வருவது பலமுறை கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது 2024ம் ஆண்டு டிசம்பர் 21 அன்று, சென்னை விமான நிலையத்தில் கேரளத்தைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து 3.24 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த ஒரு மாதத்தில் சென்னை சுங்கத்துறை குறைந்தது மூன்று முறை இதேபோன்ற பறிமுதல்களை மேற்கொண்டுள்ளது, குறைந்தது 13 கிலோவை முழுமையாக பறிமுதல் செய்துள்ளது. கடந்த வாரம் டிஆர்ஐ அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 15 கிலோ பறிமுதல் செய்து, தாய்லாந்து நாட்டவர் உட்பட இருவரை கைது செய்தது. நவம்பர் 25 அன்று ஹைதராபாத் சுங்கத்துறை 2.2 கிலோ பறிமுதல் செய்தது, அதே நேரத்தில் மும்பை சுங்கத்துறையும் இதே போன்ற பல வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.
இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் சாக்லெட்டுக்கள் பதுக்கி கடத்தப்பட்டு வந்த ,ரூ.9.5 கோடி மதிப்புடைய, 9.5 கிலோ, கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. சாக்லேட்டுகள் வடிவிலும், உணவு பாக்கெட்களிலும் மறைத்து வைத்து கடத்திக் கொண்டு வந்த, இரண்டு பயணிகளையும், இந்த கஞ்சா பார்சல்களை வாங்கிச் செல்ல வந்திருந்த, வடமாநிலத்தைச் சேர்ந்த, மற்றொருவரையும், மொத்தம் 3 பேரை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னைக்கு வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் பதப்படுத்தப்பட்ட ஹைட்ரோபோனிக் கஞ்சா, கடத்திக் கொண்டு வரப்படுவதாக சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு, ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து சுங்கத்துறை ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகள், சென்னை விமான நிலையத்துக்கு, நள்ளிரவில் வரும் விமான பயணிகளை, தீவிரமாக கண்காணித்துக் கொண்டு இருந்தனர்.
இந்தநிலையில் தாய்லாந்து நாட்டுத் தலைநகர் பாங்காக்கில் இருந்து தாய் ஏர்லைன்ஸ், பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை, சுங்கத்துறை ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகள் ரகசியமாக கண்காணித்தபோது, வடமாநிலத்தைச் சேர்ந்த பயணி ஒருவர், சுற்றுலா பயணி விசாவில், தாய்லாந்து நாட்டிற்கு போய்விட்டு, தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு வந்திருந்தார். ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகளுக்கு, அந்தப் பயணி மீது சந்தேகம் ஏற்பட்டது. வடமாநிலத்தைச் சேர்ந்த இவர், தாய்லாந்தில் இருந்து திரும்பி வரும்போது, சென்னைக்கு வந்தது ஏன்? என்ற சந்தேகத்தில், அவரை நிறுத்தி விசாரித்தனர். விசாரணையில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார்.

இதை அடுத்து அந்த வட மாநில பயணியை சுங்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று, அவருடைய உடமைகளை பரிசோதித்தனர். அப்போது அவருடைய உடமைக்குள், சாக்லேட் பார்சல்கள், மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள் பாக்கெட் இருந்தன. அவைகளைக் பிரித்து பார்த்த போது, அவைகளில் பதப்படுத்தப்பட்ட உயர்ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து 7.5 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அதன் சர்வதேச மதிப்பு ரூ.7.5 கோடி.
இந்த நிலையில் தாய்லாந்து நாட்டுத் தலைநகர் பாங்காக்கில் இருந்து, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை, சுங்க அதிகாரிகள் கண்காணித்த போது, வடமாநிலத்தைச் சேர்ந்த மற்றொரு ஆண் பயணி, சுற்றுலா பயணியாக, தாய்லாந்து நாட்டிற்கு போய்விட்டு, அவர் சென்னைக்கு திரும்பி வந்திருந்தார்.
சுங்கத்துறை ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகள், அந்தப் பயணியையும் சந்தேகத்தில் விசாரித்து, அவருடைய உடைமைகளை சோதனை செய்தனர். அவருடைய உடைமைகளில் மறைத்து வைத்திருந்த சுமார் 2 கிலோ, ஹைட்ரோபோனிக் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.2 கோடி. இதை அடுத்து அந்தப் பயணியையும், சுங்க அதிகாரிகள் கைது செய்தனர்.
இந்தநிலையில் இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்திய போது, அவர்கள் கடத்தல் குருவிகள். அவர்களை இந்த கடத்தலுக்கு வேறு சிலர்தான் பயன்படுத்தினர். அவர்கள் கடத்திக் கொண்டு வந்த இந்த ஹைட்ரோபோனிக் கஞ்சாவை வாங்கி செல்வதற்கு, கடத்தல் கும்பலைச் சேர்ந்த ஒருவர், சென்னை விமான நிலையத்திற்கு வந்திருப்பதாகவும் தெரிந்தது. இதை அடுத்து சுங்கத்துறை ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகள், சென்னை விமான நிலைய பகுதியில், சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். அவர் கஞ்சா போதை கடத்தும் கும்பலை சேர்ந்தவர் என்றும், அவர்தான் இந்த கஞ்சா பார்சல்களை வாங்கி, ரயில் மூலம் வேறு மாநிலங்களுக்கு எடுத்து செல்ல வந்துள்ளார் என்றும் தெரியவந்தது. இதை அடுத்து சுங்க அதிகாரிகள், அவரையும் கைது செய்தனர்.
ஹைட்ரோபோனிக் கஞ்சா
இந்தநிலையில் கைது செய்யப்பட்டுள்ள மூன்று பேரிடமும், சுங்க அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் மேலும் சிலர் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே அவர்களையும் கைது செய்ய, சுங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துக் கொண்டு இருக்கின்றனர்.
சென்னை விமான நிலையத்தில், அடுத்தடுத்து இரண்டு விமானங்களில் தாய்லாந்து நாட்டிலிருந்து, கடத்திக் கொண்டுவரப்பட்ட, ரூ.9.5 கோடி மதிப்புடைய உயர் ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, வடமாநிலத்தைச் சேர்ந்த கடத்தல் பயணிகள் இரண்டு பேர், இந்த கஞ்சா வை வாங்கிக் கொண்டு செல்ல வந்த மற்றொரு நபர் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.