சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான, கொளத்தூர் தொகுதியில் ரூ.625 கோடி மதிப்பில் 8905 புதிய டிரான்ஸ்பார் மர்களை இன்று தொடங்கி வைத்தார்.
சென்னையில் அடிக்கடி ஏற்பட்டு வரும் மின்வெட்டு, மின்தடை, குறைந்த மின்னழுத்தம் உள்பட தமிழ்நாடு முழுவதும் சீரான மின் விநியோகம் செய்ய கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில், சில மின்மாற்றிகளில் அதிக மின்பளுவும், சில மின்மாற்றிகளில் கடைமுனை பகுதிகளில் உச்ச நேரங்களில் குறைந்த மின்னழுத்த குறைபாடும் ஏற்படுவதாக கூறப்பட்டது. அதை நிவர்த்தி செய்தவற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டன. சென்னையில் மின்தடையை தவிர்க்கும் வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தொகுதியான சென்னை கொளத்தூர் தொகுதியில், 625 கோடி ரூபாய் மதிப்பில் 8,905 புதிய மின்மாற்றிகள் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது.
அதன்படி, இன்று, (29.8.2021) சென்னை, கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஜி.கே.எம். காலனியில் அமைந்துள்ள விளையாட்டுத் திடலில் 8,905 புதிய மின்மாற்றிகள் அமைக்கும் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த பணிகள் நான்கு மாதங்களில் முடிக்க தமிழ்நாடு அறிவுறுத்தியுள்ளார். மேலும், கொளத்தூர் தொகுதியில் லோகோ செட் காந்தி நகர், ஜி.கே.எம். காலனி 25வது தெரு, ஜி.கே.எம் காலனி 30வது தெரு, வி.வி.நகர் 2வது தெரு, பூம்புகார் நகர் 1வது மெயின் ரோடு மற்றும் யுனைடெட் காலனி 2வது தெரு ஆகிய 6 இடங்களில் வளைய சுற்றுத்தர அமைப்புடன் கூடிய மின்மாற்றிகள் அமைக்கும் பணிகள் முடிவுற்றதைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் அதனை இயக்கி வைத்தார்.
இதன்காரணமாக கொளத்தூர் தொகுதியில் விரைவில் மின்சாரம் தொடர்பான பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.