லண்டன்: புகழ்பெற்ற மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர்களில் ஒருவரான அம்ரிக் சிங், கொரோனா தொற்று காரணமாக, தனது 89வது வயதில் லண்டனில் காலமானார்.
அவர் கடைசியாக கூறிய வார்த்தைகளை மருத்துவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை என்று கூறப்படுகிறது. இவர், நீண்டகாலம் பிரிட்டனிலேயே வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவருடன் சேர்ந்து, இவரின் நண்பரும் சக ஓட்டக்காரருமான அஜித் சிங் மற்றும் உலகின் அதிக வயதான மாரத்தான் ஓட்டக்காரர் ஃபவுஜா சிங் ஆகியோர் அறியப்படுகின்றனர். ஃபவுஜா சிங், தற்போது 109 வயதில் உள்ளார். இவர்கள், அனைவருமே இந்திய வம்சாவழியை சேர்ந்தவர்கள் (பஞ்சாப்).
ஃபவுஜா சிங், பிரிட்டன் வருவதற்கு முன்னதாகவே, அம்ரிக் சிங் மற்றும் அஜித் சிங் போன்றவர்கள், அங்கே பயிற்சி பெற்ற மாரத்தான் ஓட்டப் பந்தய வீரர்களாக இருந்தனர். ஃபவுஜா சிங்கை முறையாகப் பயற்சி எடுத்துக்கொள்ளுமாறு தூண்டியதும் அவர்கள்தான்.
தற்போது கொரோனாவால் மரணமடைந்துள்ள அம்ரிக் சிங், மொத்தம் 650 பதக்கங்களை, உலகளாவிய அளவில் பெற்றுள்ளார்.
இந்த மூவரில் அஜித் சிங், தனது 87வது வயதில் மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஃபவுஜா சிங், தனது ஓட்டத்தைத் துவங்குவதற்கு 25 ஆண்டுகளுக்கு முன்னதாகவே, அம்ரிக் மற்றும் அஜித், தங்களின் ஓட்டத்தை தொடங்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அஜித் சிங்கின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட தன்னால், அம்ரிக் சிங்கை கடைசியாகப் பார்க்கக்கூட முடியவில்லையே என்று கண்ணீர் சிந்தியுள்ளார் ஃபவுஜா சிங்.