ஸ்ரீநகர்:

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு சுற்றுலாப்பயணிகளின் வருகை சுமார் 87% குறைந்து உள்ளதாக மாநில சுற்றுலாத்துறை தெரிவித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

“காஷ்மீரில் சிறப்பு சட்டப்பிரிவு கடந்த ஆகஸ்டு மாதம் 5ந்தேதி (ஆகஸ்டு 05, 2019) நீக்கப்பட்டு, இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.  அன்று முதல் அங்கு சுற்றுலா வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாற்று பயணிகளின் எண்ணிக்கை கடுமையாக சரிந்துள்ளதாக மாநில சுற்றுலாத் துறை தெரிவித்து உள்ளது. சுற்றுலா பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுவதாகவும் கூறி உள்ளது.

காஷ்மீர் மாநிலம்,  ஜம்மு அண்டு காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. கடந்த அக்டோபர் இறுதியில் ஜம்மு அண்டு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்கள் அதிகாரப்பூர்வமாக உதயமாகின.  இதன் காரணமாக, அந்த பகுதிகளைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். மேலும், தொலைத்தொடர்பு சேவை முற்றிலும் முடக்கப்பட்டது.

தற்போது அங்கு இயல்பு நிலை திரும்பியிருந்தாலும், சுற்றுலாப்பயணிகள் வருகை பெருமளவில் சரிந்துள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அங்கு செல்வதை தவிர்த்து வருகின்றனர்.

கடந்த ஆகஸ்டு முதல் நவம்பர் வரையிலான காலத்தில் 32 ஆயிரம் உள்நாட்டு பயணிகள் மட்டுமே காஷ்மீருக்கு சுற்றுலாவுக்கு சென்றுள்ளனர். சென்ற ஆண்டின் இதே காலத்தில் 2.49 லட்சம் உள்நாட்டு பயணிகள் காஷ்மீரை சுற்றி பார்த்தனர். இதை ஒப்பிட்டு பார்க்கும்போது, நடப்பாண்டில், காஷ்மீருக்கு உள்நாட்டு பயணிகளின் வருகை 87 சதவீதம் குறைந்துள்ளது.

10,946 உள்நாட்டு மற்றும் 1,140 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் புதிதாகத் உருவாக்கப்பட்ட யூனியன் பிரதேசத்திற்கு வருகை தந்தனர் மேலும், கடந்த நவம்பர் வரையிலான 4 மாத காலத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையும் 82 சதவீதம் குறைந்துள்ளது.

சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததால் அங்குள்ள மக்களின் வருவாயும் பாதித்தது.

இதுகுறித்து கூறியுள்ள சுற்றுலாப்பயணி ஒருவர்,  “நான் பல முறை காஷ்மீருக்கு விஜயம் செய்துள்ளேன், முக்கியமாக பனிச்சறுக்கு விளையாட்டுக்காக. ஆனால், தற்போது இங்கு நிலவி வரும் அசாதாரண சூழ்நிலை, மற்றும் இணையம் முடக்கம் காரணமாக  நானும் எனது நண்பர்களும்  எங்கள் தங்கு காலத்தை குறைக்க வேண்டி உள்ளது என்று கூறி உள்ளார்.

கடந்த ஆகஸ்டு மாதம்  பதிவுசெய்யப்பட்ட 9,004 உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலான வர்கள் அமர்நாத் யாத்ரீகர்கள் என்றும்,  அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில், 21,413 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் காஷ்மீருக்கு விஜயம் செய்தனர், இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் கால் பங்கிற்கும் குறைவானதுஎன்று தெரிவித்துள்ள சுற்றுலாத்துறை, கடந்த ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை 3,413 வெளிநாட்டினர் பள்ளத்தாக்குக்கு விஜயம் செய்தது உள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.