சென்னை: தமிழ்நாட்டில் ஒன்றரை லட்சம் பேர் எழுதிய ஆசிரியர் தகுதி தேர்வில் 86 சதவீதம் பேர் தோல்வி அடைந்துள்ளனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதான் தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களின் கல்வித்திறன் என சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
ஆசிரியர் பணிக்கு தகுதிதேர்வு எழுதி தேர்வானவர்களுக்கு மட்டுமே பணி வழங்கப்பட வேண்டும் என மத்தியஅரசும், நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதை யடுத்து தமிழ்நாட்டிலும் தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் தேர்வுகள் நடத்தப்பட்டு, பணிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
2022-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த (2021) அக்டோபர் மாதம் 14-ந் தேதி முதல் 19-ந்தேதி வரை நடைபெற்றது. இந்த ஆசிரியர் தகுதி தேர்வில் மொத்தம் 1 லட்சத்து 53 ஆயிரத்து 233 தேர்வர்கள் கலந்து கொண்டனர். இந்த தேர்வுக்கான முடிவுகள் கடந்த 2-ந்தேதி அன்று ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
அதில், 21 ஆயிரத்து 543 பேர் தகுதி பெற்றுள்ளனர். அதாவது ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்களில், 86 சதவீதம் பேர் தோல்வி அடைந்து உள்ளனர்.
இதையடுத்து, அனைத்து விண்ணப்பதாரர்களும் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய 24.7.2022 முதல் 27.7.2022 வரை ஏற்கனவே வாய்ப்பு வழங்கப்பட்டது. எனவே விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள தற்போது அளிக்கும் கோரிக்கையின் மீது ஆசிரியர் தேர்வு வாரியம் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாது என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
தற்போது விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தில் சமர்ப்பித்த விவரங்களின் அடிப்படையில் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் சான்றிதழை நேற்று முதல் பதிவிறக்கம் செய்து வருகிறார்கள். 3 மாதங்கள் வரை சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்து உள்ளது.
மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்கான ஆசிரியர் தேர்வை 1 லட்சத்து 53 ஆயிரத்து 233 பேர் எழுதி இருந்த நிலையில் அதில் 21 ஆயிரத்து 543 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக அரசு பள்ளிகளில் பெரும்பாலான ஆசிரியர்கள் இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்ற நிலையில், பணியில் சேர்ந்தபிறகு, தொலைதூர கல்வி மூலம் பட்டயப்படிப்புகளை படித்து, பதவி உயர்வு பெற்று உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் பணியாற்றி வருகின்றனர். தற்போதைய பாடத்திட்டங்களை மாணாக்கர்களுக்கு போதிக்கும் அளவில் பெரும்பாலான ஆசிரியர்களுக்கு தகுதி இல்லாத நிலையே உள்ளது. இதைத்தான் ஆசிரியர் தேர்வு வாரிய முடிவுகளும் வெளிக்கொணர்ந்து உள்ளது.
இனிமேலாவது தமிழகஅரசு விழித்துக்கொண்டு, ஆசிரியர் பணிக்கு குறைந்த பட்சம் ஒரு பட்டப்படிப்பு முடித்து, பிஎட் படிப்பும் தேர்ச்சி பெற வேண்டும் என அறிவிக்க வேண்டாம். அதுபோல இடைநிலை ஆசிரியர் பயிற்சியையும் நிறுத்தி வைத்துவிட்டு, அதற்கு பதிலாக பிஎட் படிப்பை தொடங்க வேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.