டில்லி
இந்த மாதம் 7 நாட்கள் குடியரசு தின ஊர்வல ஒத்திகை நடப்பதால் அப்போது விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
வரும் 26 ஆம் தேதி இந்திய குடியரசு தின ஊர்வலம் டில்லியில் நடைபெற உள்ளது. வருடா வருடம் நடைபெறும் இந்த ஊர்வலத்தில் அனைத்து மாநிலங்கள் மற்றும் அரசுத் துறையை சேர்ந்த வாகனங்கள் கலந்துக் கொள்ளும். இதைக் காண பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரமுகர்கள் வருகை தருவது வழக்கமாகும். இதற்கான சுமார் ஒரு வாரம் ஒத்திகை நடக்கும்.
அவ்வாறு இந்த வருடத்துக்கான குடியரசு தின ஊர்வல ஒத்திகை மற்றும் ஊர்வலம் வரும் ஜனவரி 18, 20 முதல் 24 மற்றும் 26 ஆகிய 7 தினங்கள் நடைபெற உள்ளது. இதில் 26 அன்று ஊர்வலம் நடைபெறும். இந்த ஒத்திகையின் போது உண்மையான ஊர்வலத்தின் போது உள்ள அனைத்துக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படுவது வழக்கமாகும். அதை ஒட்டி இந்த 7 நாட்களும் காலை 10.45 மணியில் இருந்து 12.15 மணி வரையிலான ஒன்றரை மணி நேரத்துக்கு விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு நாளும் இந்த ஒன்றரை மணி நேரத்தில் டில்லியில் சுமார் 90 உள்நாட்டு விமானங்களும், 30 சர்வதேச விமானங்களும் வந்து போகும் நேரமாகும். இதனால் இந்த ஏழு நாட்களுக்கு 840 விமான சேவைகள் பாதிக்கப்படும் என தெரிய வந்துள்ளது. ஆகவே இந்த விமான சேவையின் நேரத்தை மாற்ற விமான நிலைய அதிகாரிகள் முயன்றுள்ளனர். ஆனால் அனைத்து நேரங்களிலும் தொடர்ந்து விமான சேவை உள்ளதால் அவர்களால் நேரத்தை மாற்றி அமைக்க இயலவில்லை.
இந்நிலையில் விமான நிலைய அதிகாரி ஒருவர், “குடியரசு தின ஊர்வலம் மற்றும் ஒத்திகை நாட்களில் விமான சேவை பாதிப்பு அடையாமல் இருக்க டில்லி விமான நிலைய நிர்வாகம் முயற்சிகளை எடுத்து வருகிறது. ஆயினும் இடமின்மையால் நேரத்தை மாற்றி அமைப்பது கடினமாக உள்ளது. ஆகவே பல விமான சேவைகள் ரத்தாக வாய்ப்பு உள்ளது. பொதுமக்களின் ஒத்துழைப்பு இந்த விவகாரத்தில் கோரப்பட்கிறது.” என தெரிவித்துள்ளார்.