பாட்னா: 800 ஆண்டுகளுக்கு முந்தைய நாட்டின் பழமையான பல்கலைக்கழகமான நாளந்தா பல்கலைக்கழகம் ரூ.1,749 கோடியில் பல்வேறு கட்டிடங்கள் கட்டப்பட்டு மாணவர்களின் பயன்பாட்டுக்காக இன்று பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவின் பொற்காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் நாளந்தாவின் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.
உலகின் மிகப் பழமையான பல்கலைக்கழகம் என்ற பெருமையைப் பெற்ற நாளந்தா பல்கலைக்கழம் பீகார் மாநிலம் ராஜ்கிர் பகுதியில் உள்ளது. இந்த பல்கலைக்கழகம் யுனேஸ்கோ சிறப்பு பெற்றது. இந்த நாளந்தா பல்கலைக்கழகத்தை புணரமைத்து, செயல்பட்டு கொண்டு வருவதாக ஏற்கனவே மத்திய பாஜக அரசு அறிவித்து, அதற்காக ரூ.1,749 கோடி ஒதுக்கப்பட்டது.
அதன்படி நாளந்தா பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே இருந்த சில கட்டிடங்கள் புணரமைக்கப்பட்டதுடன், மேலும் பல கட்டிடங்கள் கட்டப்பட்டு புதிய பல்கலைக்கழகமாக நாளந்தா பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று நடைபெற்ற விழாவில் திறந்து வைத்தார். இந்த பல்கலையில் 40 வகுப்பறைகள் உள்ளன. இங்கு 1900 மாணவர்கள் அமர்ந்து கல்வி பயிலலாம். மாணவர் விடுதி, அரங்கம் என சர்வதேச தரத்துடன் இப்பல்கலை கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டடம் முழுக்க சூரிய ஒளியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்குள் 100 ஏக்கர் பரப்பளவில் நீர்நிலைகள் உள்ளன.
இந்த விழாவில், பீகார் ஆளுநர் ராஜேந்திர வி. அர்லேகர், முதல்வர் நிதீஷ் குமார், வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, இந்தப் பல்கலைக்கழகத்துக்கு அருகே, மிகப் பழமையான யுனெஸ்கோவால் உலக பழம்பெருமை வாய்ந்த தளம் என அடையாளம் காணப்பட்டு பாதுகாக்கப்பட்டு வரும் நாளந்தா பல்கலைக்கழகத்தினை பிரதமர் மோடி பார்வையிட்டார்.
உலகின் பழமையான பல்கலைக்கழகமாக அறியப்படும் பீகாரைச் சேர்ந்த நாளந்தா பல்கலைக்கழகம், கடந்த ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று கூறப்படுகிறது. இந்த பல்கலைக்கழகம் பல்வேறு கல்விப் பணிகளில் ஈடுபட்டு வந்ததாகவும், இதில்,, உலகம் முழுவதிலுமிருந்து வந்த மாணவர்கள் கல்வி பயின்றதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பண்டைய காலத்தில் கல்வியின் மூலம் உலக நாடுகளை இந்தியாவுடன் இணைக்கும் பாலமாகவும், அடித்தளமாகவும் நாளந்தா பல்கலைக்கழகம் விளங்கியிருக்கிறது. கி.பி.427ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 12ஆம் நூற்றாண்டு வரை செயல்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பல்கலைக்கழகத்தை, 12ம் நூற்றாண்டில், இந்தியாவுக்கு படையெடுத்து வந்த அந்நியர்களால், சேதமாக்கப்பட்டது.
இந்த பல்கலைக்கழகத்தை மீண்டும் உயர்ப்பிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வந்தன. அதனப்டி, நாளந்தா பல்கலைக்கழக சட்டம் 2010ன்படி, இந்த பல்கலைக்கழகம் உருவாக்கும் பணிகள் தொடங்கின. முதற்கட்டமாக, 2014ஆம் ஆண்டு முதல் குறைவான மாணவர் எண்ணிக்கையில் இப்பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்துக்கு தற்போது மீண்டும் புத்துயிர் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த பல்கலைக்கழகத்தை திறந்து வைத்து பேசிய பிரதமர் மோடி, இந்தியாவின் பொற்காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் நாளந்தாவில் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார். மேலும், “இந்தியாவை உலகிற்கு கல்வி மற்றும் அறிவின் மையமாக மாற்றுவதே எனது நோக்கம். இந்தியாவின் அடையாளத்தை மீண்டும் உலகின் தலைசிறந்த அறிவாக உருவாக்குவதே எனது நோக்கம். மையம்… இன்று 1 கோடிக்கும் அதிகமான குழந்தைகள் அடல் டிங்கரிங் ஆய்வகத்தில் சமீபத்திய தொழில்நுட்பத்தை வெளிப்படுத்தியதன் பலனைப் பெறுகின்றனர்…” என கூறினார்.
முன்னதாக இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்த பிரதமர், நாலந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தை இன்று திறந்து வைக்கிறோம். கற்றல், ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதில் எங்களின் உறுதிப்பாட்டை இது மீண்டும் வலியுறுத்துகிறது. உலகத்தில் உள்ள சிறந்த அறிஞர்களை நம் நாட்டிற்கு வந்து அவர்களின் கல்வியைத் தொடரும் முயற்சியும் இதுவாகும் என குறிப்பிட்டிருந்தார்.