லாஸ் ஏஞ்சல்:
கடந்த வாரம் ஆஸ்கர் விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்தது. ஹாலிவுட் உள்ளிட்ட பல நாடுகளின் நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரைப்படத் துறையினர் பெரும் திரளாக கலந்துகொண்டனர். உலகமே கண்டு வியக்கும் வகையில் நடந்த இந்த விழாவில் கவர்னர்ஸ் பால் இசை கச்சேரியுடன் அறுசுவை விருந்துக்கும் ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது.
பல நாடுகளில் புகழ்பெற்ற விதவிதமான உணவு வகைகள், பிரத்யேக உணவு வகைகளும் தயார் செய்யப்பட்டிருந்தது. விழாவில் கலந்து கொண்ட அனைவரும் பெரும்புள்ளிகள். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் இவர்களுக்கு பசி என்றால் என்வென்றே தெரியாத அளவுக்கு வாழ்க்கையின் உயரத்தில் இருப்பவர்கள். புகழ், பணத்தில் கொடி கட்டி பறக்கும் இவர்களுக்கு உணவு இல்லாமல் அவதிப்படும் ஏழை மக்களை நினைத்து பார்க்க கூட நேரம் இருக்காது.
இதை மெய்பிக்கும் வகையில் ஆஸ்கர் விழாவில் தயார் செய்யப்பட்ட விருந்தை சாப்பிட ஆள் இல்லை. இதனால் 800 பேர் சாப்பிட கூடிய அளவிலான உணவுகள் தேங்கியது. இதை மறுநாள் வைத்து சாப்பிடுவது சாத்தியமில்லை. ஏழை மக்களை உள்ளே அழைத்து விருந்தை பரிமாற கவுரம் இடம் கொடுக்காது. அதனால் கடைசியில் அந்த உணவு குப்பைத்தொட்டிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்த தகவல் அந்த நகரில் உள்ள ‘செப்ஸ் ஆப் ஹங்கர்’ மற்றும் கோபியா என்ற இரு தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ஓடோடி வந்து வீணாக இருந்த உணவு வகைகளை பெற்று அதை ஏழை எளிய மக்களுக்கு வழங்கி அவர்களின் பசியை போக்கினர்.
‘‘செப்ஸ் ஆப் எண்ட் ஹங்கர்’’ என்ற அமைப்பு கடந்த 6 ஆண்டுகளாக பார்ட்டி, விழாக்களில் வீணாகும் உணவுகளை சேகரித்து உணவுடன் தங்கும் விடுதியாக செயல்பாடும் மிட்நைட் மிஷன் மற்றும் தி லாஸ் ஏஞ்சல்ஸ் ரீஜனல் புட் பேங்க் ஆகிய அமைப்புகளுக்கு வழங்கி வருகிறது. இந்த ஆண்டு இந்த அமைப்பு ஓட்டல்களில் வீணாகும் உணவை சேகரித்து ஏழைகளுக்கு வழங்கி வரும் கோபியா என்ற அமைப்புடன் கைகோர்த்துக் கொண்டுள்ளது.
பிரபல நடிகையும், சமூக ஆர்வலருமான ப்ரீடா பின்டோ ஆஸ்கர் விழாவில் வீணாக இருந்த உணவு குறித்த தகவலை கோபியாவுக்கு தெரிவித்துள்ளார். இவரும் உணவு வீணடிப்பதில் உடன்பாடு இல்லாதவர். இதையடுத்து இரு தொண்டு நிறுவனங்களும் இணைந்த வீணாக இருந்த உணவை சேகரித்து 800 பேருக்கு வழங்கியதாக இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ப்ரீடா பின்டோ தெரிவித்துள்ளார்.
முதல் முறையாக ஆஸ்கர் விழாவில் உணவு வீணடிப்பது தடுக்கப்பட்டுள்ளது. இது நல்ல தொடக்கமாகும். இந்த உணவை கோபியாவுடன் இணைந்து ஏழைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. ‘‘ஜீரோ வேஸ்ட் ஜீரோ ஹங்கர்’’ என்ற அடிப்படையில் இவ்வளவு உணவு வீணாவது நல்லதல்ல என தெரிவித்துள்ளார். ப்ரீடா பின்டோ ஒரு இந்திய நடிகை. மும்பையை சேர்ந்தவர். அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாட்டு திரைப்படங்களில் அதிகம் நடித்து புகழ்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்கர் விருது பெற்ற ‘‘ஸ்லம் டாக் மில்லியனர்’’ என்ற திரைப்படத்தில் ப்ரீடா பின்டோ முன்னணி நடிகையாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு தான் ஏ.ஆர்.ரஹ்மானும் ஆஸ்கர் விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் உணவு வீணாவது பெரிய பிரச்னையாக உள்ளது. மொத்த உணவு உற்பத்தியில் 40 சதவீதம் நேரடியாக குப்பை தொட்டிக்கு செல்கிறது. நடிகை ப்ரீடா பின்டோவும், கோபியா அமைப்பும் கைகோர்த்திருப்பது, நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கும், வீணாகும் உணவை மறுவிநியோகம் செய்வோருக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் இந்த உறவின் மூலம் உணவு வீணாவதை குறைக்க முடியும். மறைந்து கிடக்கும் இந்த பிரச்னை குறித்து விழிப்புணர்வு ஏற்படும்.