டெல்லி: செப்டம்பர் 12 முதல் நாடு முழுவதும் கூடுதலாக 80 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

இந்த அனைத்து சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு செப்டம்பர் 10ம் தேதி தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சென்னை சென்டிரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் இருந்து செப்டம்பர் 7 முதல் கூடுதலாக 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

இது தவிர கூடுதலாக 6 சிறப்பு ரயில்களை இயக்குமாறு ரயில்வே அமைச்சகத்துக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது. அதை ஏற்று, செப்டம்பர் 7 முதல் சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து 4 சிறப்பு ரயில்கள், எழும்பூரில் இருந்து 2 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

ஏற்கனவே 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் நிலையில் தற்போது கூடுதலாக 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. நாளை மறுநாள் முதல் நாடு முழுவதும் மெட்ரோ ரயில்களும் இயக்கப்படுகின்றன.