சென்னை: திமுக அறிவித்த 80 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றப்பட்டுள்ளது என பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.

தி.மு.க. மூத்த முன்னோடிகள் 500பேருக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த ஒராண்டு திமுக ஆட்சியில் 80 சதவிகித வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

திருவள்ளூர் மேற்கு மாவட்ட தி.மு.க. மூத்த முன்னோடிகள் 500 பேருக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி திருவள்ளூர் மத்திய மாவட்ட பொறுப்பாளர் அமைச்சர் ஆவடி சா.மு.நாசர்  தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின்,  500 மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கி கவுரவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், இந்த நிகழ்ச்சி பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி என்பதால் உடனே தேதி வழங்கினேன். கலைஞரின் பிறந்த நாளை கொண்டாடும் நாம் ஜூன் 3-ந்தேதியுடன் நிறுத்தி கொள்ளவில்லை. அடுத்த ஆண்டு ஜூன் 3 வரை கூட கொண்டாடுவோம். கலைஞர் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமிழக மக்களுக்காக உழைத்தவர், போராடியவர். அவரது பிறந்த நாளையொட்டி ஒவ்ரொரு மாவட்டத்திலும் பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற தொடங்கி உள்ளது. ஜூன் 3-ந்தேதி சென்னை கிழக்கு மாவட்டத்தில் நடைபெற்ற பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றேன்.

வேருக்கு விழா எடுக்கிறோம் என்றால் கலைஞர் தான் இயக்கத்தின் வேர். தமிழகத்தின் வேர். அப்படிப்பட்டவருக்கு இன்று விழா நடத்துகிறோம். தமிழ்நாட்டின் பெருமையை நிலை நாட்டியவர் கலைஞர். கலைஞர் வேராக இருந்தாலும் அவருடன் உழைத்த உங்களால் தான் இயக்கம் கம்பீரமாக நிற்கிறது. எனவே நீங்கள் செய்த பணிக்கு பரிகாரம் இந்த பொற்கிழி என நீங்கள் கருதகூடாது.

தி.மு.க. இன்று 6-வது முறையாக ஆட்சியில் இருப்பதற்கு நீங்கள் தான் காரணம். உங்கள் உழைப்பு தான் காரணம். நாங்கள் இந்த பொறுப்பு களில் இருப்பதற்கு நீங்கள் தான் முழு காரணம். உங்களை ஊக்கப்படுத்த தான் இந்த மரியாதை செய்கிறோம். உங்கள் உழைப்புக்கு ஈடு இணை எதுவும் இல்லை. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தமிழக மக்களுக்காக உழைத்தவர் கலைஞர்.

இன்று பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால், தமிழகத்தில் திராவிட மாடல் என்று சொல்லக்கூடிய வகையில் ஆட்சி நடைபெறுகிறது. தேர்தல் நேரத்தில் என்னென்ன வாக்குறுதி களை மக்களிடம் எடுத்து சொன்னோமோ அவற்றில் 80 சதவீதத்துக்கும் மேல் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்னும் 20 சதவீத வாக்குறுதிகள் தான் இருக்கிறது.

நான் இல்லை என்று சொல்லவில்லை. ஒரு பக்கம் கொரோனா நோய். மற்றொரு பக்கம் நிதி பற்றாக்குறை, கஜானா காலி என்ற நிலையில் ஆட்சிக்கு வந்தோம். அதையெல்லாம் சமாளித்து 80 சதவீதத்துக்கு மேல் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம். மிச்சம் உள்ள 20 சதவீத வாக்குறுதிகளை அதையும் உறுதியாக காப்பாற்றுவான் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று உறுதிபட தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.