ஸ்ரீநகர்:

காஷ்மீரில் பகர்வால் இன மக்களை ரசானா கிராமத்தின் கதுவா பகுதியில் இருந்து வெளியேற்றுவதற்காக தான் 8 வயது சிறுமி பாலியல் பலாத்கார கொலை செய்யப்பட்டிருக்கும் அதிர்ச்சி தகவல் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முதல் குற்றவாளி சிறுவர் என்று முதலில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் மருத்துவ பரிசோதனையில் அவருக்கு 19 வயது நிரம்பியிருப்பது உறுதியாகிவிட்டது. இந்த வழக்கின் விசாரணை நிலை அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் 3 தினங்ளுக்கு முன் தாக்கல் செய்துள்ளனர்.

அதிங், ‘‘முதல் குற்றவாளியின் உறவினர் ஒருவர் வருவாய் துறையில் இருந்து ஓய்வுபெற்றவர். அவரும் ரசானா கிராமத்தில் வசித்து வருகிறார். இவர் தான் இச்சம்பவத்தின் முக்கிய சதியாளர். இவரை தவிர சிறப்பு போலீஸ் அதிகாரி தீபக் கஜூரியா, பிரவீஷ் குமார், எஸ்பிஒ சுரேந்தர் குமார், ஹிரா நகர் போலீஸ் ஏட்டு திலக் ராஜ் ஆகியோர் ஆதாரங்களை அழித்த குற்றச்சாட்டுகளுக்காக குற்றப்பிரிவு போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த சிறுமி ஜனவரி 10ம் தேதி முதல் மாயமாகியுள்ளார். 11ம் தேதி ரசானா கிராமத்தில் மரக் கட்டைகள் அடங்கிய பகுதியில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. மருத்துவ பரிசோதனையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதியானது. மாயமாகி 3 முதல் 4 நாட்கள் வரை அவர் உயிருடன் இருந்துள்ளார். அது வரை ஒரு பெரிய வழிபாட்டு அறையில் அவர் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். அங்கிருந்து 200 மீட்டர் தூரத்தில் தான் உடல் மீட்கப்பட்டது.

அந்த வழக்கில் கைதான 19 வயது வாலிபர், அவரது உறவினர் மற்றும் எஸ்பிஓ கஜூரியா ஆகியோர் இந்த கொடூர சம்பவத்துக்கு சதி செய்துள்ளனர். ரசானா கிராமத்தில் வெளிப்புற வனப்பகுதியில் இஸ்லாமிய பகர்வால் இன மக்கள் வசித்து வருகின்றனர். இதர 13 வீடுகள் பிராமண குடும்பத்தை சேர்ந்தவர்கள்.

20 பகர்வால் குடும்பத்தினர் உள்ளூர் மக்களிடம் இடம் வாங்கி வீடுகளை கட்டி குடியேறியுள்ளனர். அவர்களை அங்கிருந்து வெளியேற்றும் வகையில் சிறுமியை கொலை செய்து பயமுறுத்தும் செயல் நடந்துள்ளது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.