திருவனந்தபுரம்:
இங்கிலாந்தில் இருந்து கேரளம் வந்த 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இங்கிலாந்தி உருமாற்றம் அடைந்த புதிய கொரோனா வைரஸ் பரவி வருவதால் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை தாறுமாறாக உயர்ந்துள்ளது. ஏற்கெனவே பரவும் கொரோனாவை காட்டிலும் புதிய வைரஸ் 70% அதிக வேகத்தில் பரவுவதாக இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.
புதிய கொரோனாவை தடுப்பதற்காக இங்கிலாந்து இடையேயான விமானப் போக்குவரத்துக்கு இந்தியா தடை விதித்துள்ளது. எனினும், அண்மையில் இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்தவர்களில் 22 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில், இங்கிலாந்தில் இருந்து கேரளம் வந்த எட்டு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக கேரள சுகாதர துறை அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார். அவர்களுக்கு புதிய கொரோனா வைரஸ் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்வதற்காக சாம்பிள்கள் புனேவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பரிசோதனை முடிவுகள் வந்தபிறகே புதிய கொரோனாவின் பாதிப்பு இருக்கிறதா என்பதை சொல்ல முடியுமென அமைச்சர் சைலஜா தெரிவித்தார். கொரோனா உருமாற்றத்தின் தாக்கம் கேரளத்தில் லேசாக இருப்பதாகவும், இதுகுறித்து ஆய்வுகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் பரவிய புதிய கொரோனா வைரஸ் வெளிநாடுகளுக்கும் பரவத் தொடங்கியுள்ள நிலையில், கேரளத்தில் உள்ள நான்கு விமான நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த வாரம் இங்கிலாந்தில் இருந்து கேரளத்துக்கு 14 பேர் வந்துள்ளனர்.