சென்னை

திருவள்ளூர் அருகே சரக்கு ரயில் தீ விபத்து ஏற்பட்டதால் 8 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இன்று அதிகாலை சென்னையில் இருந்து மைசூருக்கு பெட்ரோலியப் பொருட்களை ஏற்றிச் சென்றபோது  திருவள்ளூஎ அருகே கடும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  ரயில் தடம் புரண்டதால் தீ விபத்து நேரிட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. இதனால் சென்னை – அரக்கோணம் வழித்தடத்தில் இரு மார்க்கத்திலும் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது.  ஆனால் சென்னை திருவள்ளூர் புறநகர் ரயில்கள் வழக்கம்போல இயங்கி வருகிறது.

சரக்கு ரெயில் தீ விபத்து ஏற்பட்ட திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கு தேசிய பேரிடர் மீட்புக் குழு விரைந்தது. சம்பவ இடத்தில் திருவள்ளூர் கலெக்டர் பிரதாப், எஸ்பி சீனிவாச பெருமாள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தீயை அணைக்க துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆஸ்துமா போன்ற சுவாசக் கோளாறுள்ள மக்கள், பாதுகாப்பான பகுதிக்கு செல்லவும் என திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் உத்தரவிட்டுள்ளார்.

இந்தநிலையில், திருவள்ளூர் அருகே சரக்கு ரயில் தீப்பற்றி எரியும் நிலையில் சென்னை சென்ட்ரலில் இருந்து பல்வேறு மாநிலங்களுக்கு செல்லக்கூடிய 8 ரயில்களில் சேவை முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

* சென்னை சென்ட்ரலில் இருந்து மைசூர், கோவை, திருப்பதி, பெங்களூரு செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

* சென்னை சென்ட்ரலில் இருந்து காலையில் கோவைக்கு புறப்பட வேண்டிய இன்டர்சிட்டி, சதாப்தி ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

* சென்னை – சென்ட்ரல் மைசூரு இடையே காலையில் இயக்கப்படும் வந்தேபாரத் மற்றும் சதாப்தி ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

* சென்னை – பெங்களூரு இடையே இன்று காலை இயக்கப்படும் டபுள் டெக்கர், பிருந்தாவன் ரயில்களும் ரத்து

சென்னை – திருப்பதி ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

* 5 ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டு வருகிறது.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டதன் பேரில் 60 பேர் கொண்ட 2 குழுக்கள் விரைந்துள்ளது. ஆய்வாளர் கோபிநாத் தலைமையில் மீட்பு படையினர் விரைந்திருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.