முசாபர் நகர், உத்தரப் பிரதேசம்
உத்தரப்பிரதேச மாநிலத்தில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் எலி இருந்ததால் ஒரு ஆசிரியர் மற்றும் எட்டு மாணவர்கள் உடல் நலம் கெட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநில மதிய உணவு வழங்கும் திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்தில், தினமும் மாணவர்களுக்குப் பருப்பு, அரிசி, சப்பாத்தி, காய்கறிகள், பழங்கள் மற்றும் பால் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆண்டுக்கு 200 நாட்களாவது இந்த உணவு கட்டாயம் வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இம்மாநிலத்தில் லட்சக்கணக்கான மாணவர்கள் மதிய உணவுத் திட்டத்தின் கீழ் உணவு சாப்பிட்டு வருகின்றனர். ஆயினும் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டபடி ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்ற மாத அரசுப்பள்ளி ஒன்றில் சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள உப்பு அளிக்கப்பட்டது. சென்ற வாரம் ஒரு லிட்டர் பாலில் 81 லிட்டர் தண்ணீர் கலந்து குழந்தைகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது
இந்நிலையில் முசாபர் நகரில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் இறந்த எலி இருந்துள்ளது. இந்த உணவை 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காக ஜன் கல்யாண் சன்ஸ்தா சமிதி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் தயாரித்து அளித்துள்ளது. இந்த உணவை உட்கொண்டவர்களில் ஒரு ஆசிரியர் மற்றும் 8 மாணவர்கள் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
நாடெங்கும் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த சம்பவம் குறித்து இதுவரை மாநில பாஜக அரசு வாய் திறக்காத நிலையில் உள்ளது. இந்த சம்பவம் குறித்து முசாபர் நகர் மாவட்ட நீதிபதி அமித் குமார் சிங் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்