அமெரிக்காவின் டெட்ராய்ட் பகுதியில் வசிக்கும் போர்ஷா வுட்ருப் என்ற 8 மாத கர்ப்பிணி கார் திருட்டு மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டதாக இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் இவர் குற்றமற்றவர் என்று நிரூபணம் ஆனதை அடுத்து தவறான முக அடையாள தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி காவல்துறை தன்னை கைது செய்ததாகவும் கர்ப்பிணியான தனக்கு உடல் மற்றும் மன ரீதியாக வேதனையளித்ததாகவும் காவல்துறை மீது வழக்கு பதிவு செய்துள்ளார்.
பிப்ரவரி மாதம் கைது செய்யப்படுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன் டெட்ராய்ட் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் பெட்ரோல் நிரப்ப வந்த ஒருவரிடம் சல்லாபத்தில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத ஒரு பெண்ணை ஏற்றிக் கொண்டு சென்ற நிலையில் சிறிது தூரத்தில் நீண்டிருந்த தனது ஆண் நண்பருடன் சேர்ந்து துப்பாக்கி முனையில் கார் ஓட்டுனரை தாக்கி வழிப்பறி செய்தது மட்டுமல்லாமல் காரையும் திருடிச் சென்றுள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக பெட்ரோல் பங்கில் இருந்த சிசிடிவி கேமரா பதிவு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்த காவல்துறையினர் பழைய குற்றவாளிகளின் முக அடையாளத்துடன் ஒப்பீடு செய்ய தனியார் துப்பறியும் நிறுவனம் ஒன்றிடம் அந்த புகைப்படத்தை கொடுத்துள்ளனர்.
காலாவதியான ஓட்டுநர் உரிமம் வைத்திருந்த வழக்கில் 2015 ம் ஆண்டு கைது செய்யப்பட்ட போர்ஷா வுட்ருப் முக அடையாளத்துடன் அந்த புகைப்படம் ஒத்துப்போவதாக அவர்கள் கூறியதை அடுத்து காவல்துறையினர் போர்ஷா வுட்ருப்பை அவரது வீட்டில் இருந்து கைது செய்தனர்.
தன்னை கைது செய்ய வந்த காவல்துறையினரிடம் கர்ப்பமாக இருக்கும் நிலையில் தான் இதுபோன்ற குற்றத்தில் எவ்வாறு ஈடுபட்டிருக்க முடியும் என்றும் தான் அந்த குற்றத்தில் ஈடுபடவில்லை என்றும் வுட்ருப் கூறியுள்ளார்.
அவரின் பேச்சுக்கு செவிகொடுக்காத காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணைக்கு ஆஜர்படுத்தினர் 12 மணி நேர விசாரணைக்குப் பிறகு ஜாமீனில் விடப்பட்ட வுட்ருப் சில மாதங்கள் கழித்து அந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.
நீதிமன்ற விசாரணையில் முக அடையாள தொழில்நுட்பத்தால் தவறுதலாக இவரை கைது செய்ய நேர்ந்ததாக காவல்துறை ஒப்புக்கொண்டதை அடுத்து தற்போது காவல்துறையினர் மீது வுட்ருப் புதிய வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.
அடையாளம் தெரியாத குற்றவாளிகளை கண்டுபிடிக்க முக அடையாள தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் உள்ள சிக்கல் குறித்தும் தனது மனுவில் குறிப்பிட்டுள்ள வுட்ருப், டெட்ராய்ட் காவல்துறையினர் ஆண்டுக்கு சுமார் 125 வழக்குகளில் முக அடையாள தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதாகக் கூறியுள்ளார்.
இவர் பெரும்பாலும் கருப்பினத்தைச் சார்ந்தவர்கள் மீதான குற்ற வழக்குகளாகவே உள்ளதாகவும் இதுவரை 6 பேரை தவறுதலாக காவல்துறையினர் கைது செய்துள்ளதாகவும் இவர்கள் அனைவரும் கறுப்பினத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் இதில் வுட்ருப் தான் முதலில் கைது செய்யப்பட்ட கருப்பின பெண் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
2015 ம் ஆண்டு எடுக்கப்பட்ட தனது புகைப்படத்தை முக அடையாள தொழில்நுட்பத்தில் பயன்படுத்திய போலீசார் 2021 ம் ஆண்டு தனது ஓட்டுநர் உரிமத்தில் உள்ள புகைப்படத்தை கவனிக்க தவறியதாகவும் குறிப்பிட்டுள்ளதை அடுத்து முக அடையாள தொழில்நுட்பத்தில் ஏற்படும் மனித தவறுகளையும் சுட்டிக்காட்டியுள்ளார்.