மும்பை

மும்பை மாநகராட்சியின் சர்வதேச அளவிலான ஒரு கோடி கொரோனா தடுப்பூசி டெண்டருக்கு 8 நிறுவனங்கள் பதில் அளித்துள்ளன.

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா மாநிலம் முதல் இடத்தில் உள்ளது. இங்கு நேற்று வரை 56.02 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு 89ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர்.  இதில் 51.82 லட்சம் பேர் குணம் அடைந்து தற்போது 3.27 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.    மத்திய அரசு 18-44 வயது உடையோருக்கு அந்தந்த மாநிலங்களே கொரோனா தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்து கொள்ள அனுமதி அளித்துள்ளது.

இதையொட்டி பல மாநிலங்களும் சர்வதேச அளவில் ஒப்பந்தப்புள்ளிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளன.   அவ்வகையில் மும்பை மாநகராட்சியும் சுமார் ஒரு கோடி டோஸ்கள் கொரோனா தடுப்பூசிக்காகச் சர்வதேச அளவில் ஒப்பந்தப்புள்ளிக்கு அழைப்பு விடுத்துள்ளது.   இதற்கு 8 நிறுவனங்கள் பதில் அளித்துள்ளன.

இதில் ஒரு நிறுவனம் ஆஸ்டிரா ஜெனிகா நிறுவனம் மற்றும் பிஃபிஸர் நிறுவன தடுப்பூசிகள் வழங்க தயாரக் உள்ளது.  மற்ற 7 நிறுவனங்கள் ஸ்புட்னிக் நிறுவன தடுப்பூசியை வழங்கத் தயாராக உள்ளன.  இதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்கக் காலக்கெடுவை மும்பை மாநகராட்சி ஜூன் 2 வரை நீட்டித்துள்ளது.